தேர்தலுக்காக பொது சொத்துக்களை பயன்படுத்தியமை தொடர்பில் 10 முறைப்பாடுகள்!

தேர்தலுக்காக பொது சொத்துக்களை பயன்படுத்தியமை தொடர்பில் இதுவரையில் 10 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை ட்ரான்ஸ் பெரன்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் பொது சொத்துக்களை பாதுகாக்கும் தேசிய இணைப்பாளர் லக்விஜய பண்டார இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறினார்.

தற்போதும் தேர்தலுக்காக பொது சொத்துக்களை பயன்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பித்துள்ளதாகவும் அவ்வாறான செயற்பாடுகளை அவதானித்தால் 076-322 344 2 அல்லது 076-322 366 2 என்ற தொலைப்பேசி இலக்கங்களுக்கு பொது மக்கள் அறிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய 2019 ஆம் ஆண்டின் 19 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய எந்தவொரு அரச சொத்தையும் பயன்படுத்த முடியாது எனவும் அவர் கூறினார்.

அதேபோல் அரச ஊழியர்களும் தேர்தல் செயற்பாடுகளுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தரம் உயர்த்தல், நியமனம் வழங்கள் மற்றும் இடமாற்றம் செய்தல் போன்றவற்றையும் இந்த காலப்பகுதியில் முன்னெடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் அரச நிதியை ஒதுக்கீடு செய்து நிகழ்வுகளை நடத்த முடியாது என தெரிவித்த அவர், இலங்கை முழுவதும் ட்ரான்ஸ் பெரன்சி நிறுவனம் சார்பில் 180 க்கும் அதிகமான காண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் தேர்தல் காலங்களில் தேர்தல் ஆணைக்குழு விடுக்கும் எந்தவொரு விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பின்பற்ற தவறும் அரச அதிகாரிகள் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் குற்றவாளிகளாக கருதப்படுவர் எனவும் அவர் மேலும் கூறினார்.