கோத்தபாய – சஜித் இடையே பெரும் போட்டியே நிலவும்.! மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் பெரும் போட்டியுள்ளது. சஜித் ஜனாதிபதியானால் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசே தொடரும்.

இந்த ஆட்சியால் நாட்டு மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்காது. என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

கொள்கையற்ற அரசியல் பரப்புரையையே ஐக்கிய தேசிய கட்சி தற்போது முன்னெடுக்கின்றது. ஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித், தான் ஜனாதிபதியானால் ஜனாதிபதி பெறும் அரச சுகபோகங்கள், வரப்பிரசாதங்கள் ஆகியவற்றை பெற மாட்டேன் என்று குறிப்பிடுவது நாட்டு மக்களை ஏமாற்றும் ஒரு கருத்தாகும். அவர் அரச போகங்களை துறப்பதால் மாத்திரம் நாட்டின் ஏழ்மை இல்லாமல் போய்விடாது.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள சவால்களில் இருந்து மீண்டு வருவதற்கான எவ்வித கொள்கைகளையும் ஆளும் தரப்பு இதுவரையில் முன்வைக்கவில்லை. கடந்த ஐந்து வருட காலமாக நாட்டை நிர்வகித்த ஆட்சி முறைமையே மீண்டும் அவர்களால் செயற்படுத்தப்படும்.

2915ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் நாட்டு மக்கள் எடுக்கத் தவறான தீர்மானத்தை இம்முறையும் முன்னெடுக்கமாட்டார்கள். அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமர் பதவி வகிப்பார். மீண்டும் நாட்டில் பயனற்ற ஒரு அரசே தோற்றம் பெறும். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான பரந்துபட்ட கூட்டணி வெற்றி பெறும் தருவாயிலே காணப்படுகின்றது. சுதந்திரக் கட்சியினர் கட்சி ரீதியில் எம்முடன் இணையாவிடினும், பெரும்பாலானோர் தனிப்பட்ட முறையில் பொதுஜன முன்னணியுடன் கைகோர்த்து விட்டார்கள். அதுவே கூட்டணிக்கான முதல் வெற்றியாகும் என்றார்.