இந்துக்கல்லூரி ஒன்றில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவம்!

சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் மாணவர்களிற்கு இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தரம் 7 மாணவர்களிற்கு தடுப்பூசி போடப்படுவது வழக்கம். இதன்படி, சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் தரம் 7 மாணவர்களிற்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

இதன்போது, இரண்டு மாணவர்களிற்கு மீளவும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர்களிற்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், மீண்டும் இரண்டாம் முறையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இது குறித்து மாணவர்கள் தமது பெற்றோரிடம் முறையிட்டதையடுத்தே, விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது குறித்து இரண்டு மாணவர்களின் பெற்றோர்களும் பாடசாலை நிர்வாகத்திடம் கேள்வியெழுப்பியுள்ளனர்.

எனினும், விடயத்தை சமரசப்படுத்த முயன்று, பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தமக்கு தெரியாமல் தடுப்பூசி போட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தம்மிடம் தெரிவித்ததாக மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.

பொது சுகாதார பரிசோதர்களிடம் இது குறித்து வினவியபோது, பாடசாலை நிர்வாகம் தந்த பெயர்ப்பட்டியலின் படியே தடுப்பூசி போட்டதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்ததாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை நிர்வாகமும், பொதுச்சுகாதார பரிசோதர்களும் இணைந்து பாடசாலை மாணவர்களின் தடுப்பூசி போடுவதை கூட சிக்கலில்லாமல் செய்ய முடியாமல் உள்ளதா என மாணவர்களின் பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அண்மைக்கால தொடர் புகார்களால் தென்மராட்சி சுகாதார சேவைகளில் வீழ்ச்சியேற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் தமக்கு எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.