நடக்கவிருக்கும் தேர்தல் எதற்காக நடக்கிறது... உண்மையை வெளிபடுத்திய கஜேந்திரகுமார்!

ஜனாதிபதி தேர்தலின் மூலம் தமது நலன்களை நிறைவேற்ற வல்லரசுகள் கடும் பிரயத்தனம் செய்கின்றன என்பதை இப்போது அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் பகிஷ்கரிப்பு கோரிக்கை என்பது அந்த வல்லரசுகளின் நலன்களுக்கு சாதகமாக அமையாதுவிடும் என அவை நினைத்தால், அவை நிச்சயம் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலமாகவேனும் தமது நலனை பேணவே முயலும் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் வல்லரசுகளை அந்த புள்ளிக்கு கொண்டு வருவதற்கு எமது நிலைப்பாடுகளில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் எனவும் அதை விடுத்து நிபந்தனை அற்ற ஆதரவு வழங்கினால் அதன் மூலம் எமது மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளாது வெறுமனே வெளிச்சக்திகளின் நலன்களுக்கான பகடைகளாகவே நாம் பாவிக்கப்படுவோம் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த நாடு சிங்கள பௌத்த நாடு என்பதையும் இதில் ஒற்றையாட்சி மேலும் பலப்படுத்தப்படும் என்பதையும் யுத்தத்தை நடத்திய இராணுவத்தினர் ஒருபோதும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படமாட்டார்கள் என்பதே இந்த ஜனாதிபதி தேர்தலின் முக்கியமான பிரதான வேட்பாளர்களினதும் நிலைப்பாடு என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்கு நடக்கின்ற ஜனாதிபதி தேர்தலானது வேட்பாளர்களிற்கிடையான போட்டியோ கட்சிகளுக்கு இடையான தேர்தலோ அல்ல. இது வல்லரசுகளுக்கு இடையில் நடக்கின்ற போட்டியே என்பதை இப்போது அனைவரும் ஏற்றுக்கொள்ளுவர் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.