காரைதீவில் பல இலட்சம் மோசடியில் சிக்கிய யாழ்ப்பாண சதாசிவம்

மேற்கத்தைய நாடுகளுக்கான விசா அனுமதிபத்திரம் பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் நிதிமோசடியில் ஈடுபட்டவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு 19 இலட்சத்து 60ஆயிரம் ரூபாய் மற்றும் 12 இலட்சம் ரூபாய்களை பெற்று பாரிய நிதி மோசடி மேற்கொண்ட யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் கிழக்கைச் சேர்ந்த சதாசிவம் தியாகராஜா என்பவருக்கு எதிராக விசேட நிதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபருக்கு எதிராக சில தினங்களுக்கு முன்னர் பகிரங்க பிடிவிறாந்து வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வெளிநாட்டில் உள்ள தனது பிள்ளைகளை சந்தேக நபர் பார்வையிடுவதங்காக இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலை அடுத்து சந்தேக நபரை விசேட நிதி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து கல்முனை நீதிவான் நீதிபதி ஐ.என் றிஸ்வான் முன்னிலையில் இன்று ஆஜர் படுத்தினர்.

இதன் போது சந்தேகநபர் பல்வேறு நபர்களிடம் எந்தவித நிதியை மோசடியும் செய்யவில்லை என கோரி அவரது சட்டத்தரணிகள் நீதிவானிடம் பிணை விண்ணம் கோரி நின்றனர்.

எனினும் இந்த நபர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இதனால் அவரது பிணை விண்ணப்பத்தை ரத்து செய்யுமாறு பொலிஸ் தரப்பில் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்த குறித்த வழக்கை விசாரணைக்குட்படுத்திய பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபரை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.எல்.ரிஸ்வான் உத்தரவிட்டார்.