30 கோடி ரூபாவும் பொதுத்தேர்தலில் மூன்று ஆசனமும் கேட்ட தமிழ் அரசியல் பிரபலம் யார் தெரியுமா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றால் 30 கோடி ரூபாவும் பொதுத்தேர்தலில் மூன்று ஆசனமும் வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியிடம் மலையக தலைவர் ஒருவர் பேரம் பேசிய போது அந்தப் பேரம் வெற்றிப் அளிக்காத காரணத்தினாலேயே அந்தத் தலைவர் மொட்டுக்கு ஆதரவளிக்க முன் வந்துள்ளார் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

நேற்று (19) ஹட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளர் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம் உதயகுமார்,மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ராமசாமி , தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நகுலேஸ்வரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிர்வாக பணிப்பாளர் அழகுமுத்து நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பழனி திகாம்பரம் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது...

குறிப்பிட்ட தொழிற்சங்க தலைவர் ஐக்கிய தேசியக் கட்சியிடம் முன்வைத்த கோரிக்கை வெற்றி பெறாத காரணத்தினால் எதிரணி வேட்பாளருக்கு முன்வைத்து அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டதனாலேயே இன்று அவர் மொட்டு சின்ன வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கின்றார் போலும்.

மொட்டு சின்னத்திற்கு யார் ஆதரவு தெரிவித்தாலும் இறுதியில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவது சஜித் பிரேமதாசவே என்பதை நான் ஆணித்தரமாக கூற விரும்புகின்றேன்.

எனவே நுவரெலியா மாவட்டத்திற்கு அன்ன சின்னத்திற்கு வாக்களிக்கவுள்ள அனைத்து தொழிற்சங்க அரசியல் அபிமானிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முன்பணமாக 5000 ரூபாவை தேயிலை சபையின் மூலம் நாம் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சித்த போதும் மாற்று தொழிற்சங்கம் ஒன்று நடவடிக்கையின் காரணமாக இந்த கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதில் தற்போது இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொழிலாளர் துரோகிகளை தொழிலாளர்கள் தற்போதாவது இனங்கண்டு கொள்ள வேண்டும்.