யாழ்.விமான நிலையத்தின் அடுத்த கட்ட விமான சேவை! எங்கு தெரியுமா?

சென்னை மற்றும் திருச்சியில் இருந்து, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்குப் பறக்கும் வணிக விமானங்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதில் திருச்சியில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறை முக்கிய பங்கு வகிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை சென்னையில் இருந்து முதல் விமானம் யாழ்ப்பாணத்துக்குப் பயணத்தை மேற்கொண்டது. இதன்போது திருச்சியில் உள்ள கட்டுப்பாட்டு அறையே அந்த விமானத்தைக் கண்காணித்தது.

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அடுத்தகட்டமாக, யாழ்ப்பாணத்துக்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

“திருச்சி விமான கட்டுப்பாட்டு அறை யாழ்ப்பாணத்துக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. எனவே, ஆரம்பத்தில் யாழ்ப்பாணம்- சென்னை இடையிலான விமானங்களின் இயக்கத்தை திருச்சி விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்தே கண்காணிக்கவுள்ளோம்.

பின்னர், சென்னை விமான கட்டுப்பாட்டு அறை அதனை பொறுப்பேற்றுக் கொள்ளும்.

கடந்த செவ்வாய்க்கிழமை திருச்சிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் பரீட்சார்த்த, விமானத்தை இயக்கியிருந்தோம்” என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை, ஆரம்பத்தில், யாழ்ப்பாணத்தை தென்னிந்திய நகரங்களான சென்னை, திருச்சி மற்றும் கொச்சி ஆகியவற்றுடன் இணைப்பதில் கவனம் செலுத்தப்படும்.

இது தவிர, யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே உள்நாட்டு விமான சேவைகளும் தொடங்கப்படவுள்ளன.

இதனிடையே, வணிக விமானங்களை இயக்குவதற்கு, யாழ்ப்பாண விமான நிலையத்தை தயார்படுத்துவதில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம், முக்கிய பங்கு வகித்ததாகவும், அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும், யாழ்ப்பாண விமான நிலையத்தின் வணிக நடவடிக்கைகள், சரக்கு துறைக்கு பயனுள்ளதாக இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட திருச்சியை சேர்ந்த சுற்றுலா ஏற்பாட்டாளர் எஸ்.வெங்கடாச்சலம்,

“தற்போது, திருச்சி – கொழும்பு இடையே தினமும் இரண்டு விமான சேவைகள் இடம்பெறுகின்றன. இவை பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு நல்ல பயனை அளித்து வருகின்றன.

திருச்சிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் ஒரு புதிய விமானம் சேவையில் ஈடுபட்டால், அது பயண மற்றும் சுற்றுலாத் துறைக்கு உதவியாக இருக்கும்.

இருப்பினும், யாழ்ப்பாண விமான நிலையத்தினால் சிறிய விமானங்களை மட்டுமே கையாள முடியும் என்பதால் சரக்குத் துறை பயனடைய வாய்ப்பில்லை.” என்று கூறினார்.

அதேவேளை, யாழ்ப்பாண விமான நிலையத்தில் இருந்து தற்போதைக்கு, 72 ஆசனங்களைக் கொண்ட ATR விமானங்களையே இயக்க முடியும் என்பதால், முதலில் சென்னையில் இருந்தும், அடுத்து, திருச்சி மற்றும் கொச்சியில் இருந்தும் யாழ்ப்பாணத்துக்கான சேவைகளை நடத்தவிருப்பதாக அலையன்ஸ் எயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.