ஹிஸ்புல்லாவிற்கு எதிரா கோத்தபாய ஆதரவு சிங்கள பெண் கலைஞர்கள் போர் கொடி

கோட்டாபய ராஜபக்சவின் சிலிப்பர் செல் என கருதப்படும் எம்.எல்.ஏ.எம்.ஹிஷ்புல்லாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர் பெரமுனவை ஆதரிக்கும் சிங்கள நடிகர்களும், நடிகைகளும்.

கோட்டாபயவிற்கும், ஹிஸ்புல்லாவிற்குமிடையில் எதிர்கால தேர்தல்களிலும் எந்த தொடர்பும் இருக்கக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ராஜகிரியவிலுள்ள சு.க-பெரமுன தேர்தல் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளனர்.

இலங்கை பௌத்தத்தை பெரும்பான்மை கொண்ட நாடாக இருப்பதால், நாட்டில் ஷரியா சட்டத்தை வளர்க்கும் எந்தவொரு பல்கலைக்கழகத்தையும் நிறுவுவதை தாம் எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்குள் வஹாபிசம், மதராசா பாடசாலைகள் அல்லது ஷரியா சட்டத்தை நாங்கள் அங்கீகரிக்கவில்லை, ஏனெனில் அவை ஆபத்தான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்றார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் ஹிஸ்புல்லாவினால் வழங்கப்படும் இரண்டாவது முன்னுரிமை வாக்குகள் தேவையில்லை என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நாட்டை அபிவிருத்தி செய்யும் திறன் கொண்டவர் கோட்டாபய ராஜபக்சதான் என மூத்த நடிகை குசும் ரேணு தெரிவித்தார். அதனால் தாமரை மொட்டிற்கு வாக்களிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

நடிகர் சுதத் திலகசிறி பேசியபோது, “கடந்த அரசாங்கத்தில் இருந்தவர்கள் குற்றவாளிகள் அல்லது ஏதேனும் குற்றம் செய்திருந்தால் தற்போதைய அரசாங்கம் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது அவர்களின் அரசாங்கம்.

கடந்த நான்கரை ஆண்டுகளில் குற்றவாளிகள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு எதிராக அவர்கள் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்று நான் கேட்கிறேன்.

எனது குடும்பம் அவுஸ்திரேலியாவில் ஒரு நல்ல வாழ்க்கையை செலவிடுகிறது. நவம்பர் 17ம் திகதி செல்ல எனக்கு ஒரு நாடு இருக்கிறது. ஆனால், எனது நாட்டின் மற்ற குழந்தைகளுக்கு எதிர்காலம் தேவை’’ என்றார்.

மிலேனியம் சலஞ்ச் கோர்ப்பரேஷன் ஒப்பந்தத்தை அமல்படுத்துவது நாட்டை வடக்கு மற்றும் தெற்கு என பிளவுபடுத்துவதற்கு காரணமாகிறது, இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஒரு பெர்ச் நிலம் 180 ரூபாவிற்கு விற்கப்பட்டிருக்கும்” என்று நடிகர் லால் வீரசிங்க கருத்து கூறினார்.

நடிகைகள் நில்மினி தென்னக்கோன், சஞ்சீவனி வீரசிங்க, நடிகர் ரவீந்திர மபிடிகம ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.