மன்னாரில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட 96 வயது தந்தை! நீதிபதி விடுத்த அதிரடி உத்தரவுகள்!

மன்னாரில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட 96 வயது முதியவர் தொடர்பில் மன்னார் நீதிவான் நீதிமன்றம் அதிரடியான உத்தரவுகள் பிறப்பித்துள்ளது.

பிள்ளைகளினால் பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வாழ்ந்துவந்த 96 வயதுடைய முதியவர் தொடர்பில் கடந்த 24.10.2019ம் திகதியன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணிகளால் விசேட விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

மேற்படி முதியவரின் பிள்ளைகளான பிரதிவாதிகளுக்கு இன்றைய தினம் (07) மன்றில் தோன்றுமாறு நீதிவான் அழைப்புக் கட்டளை பிறப்பித்திருந்தார். அதற்கமைய இன்றைய தினம் குறித்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த வயோதிபர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி பா.டெனிஸ்வரன்,

சட்டத்தரணி அ.அன்ரனி றொமோள்சன் மற்றும் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணிகளான நஜ்மி ஹுசைன் மற்றும் கோபாலலிங்கம் கௌமிகா அகியோர் முன்னிலையாகி இருந்ததோடு குறித்த பிரதிவாதிகள் சார்பாக சட்டத்தரணி தர்மராஜா வினோதன் மற்றும் சட்டத்தரணி யூலியானா குலாஸ் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.

குறித்த வழக்கின் விசாரணையானது நீண்டநேரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதோடு குறித்த பிரதிவாதிகள் சார்பாக தோன்றிய சட்டத்தரணிகள் பல்வேறு சட்ட ஆட்சேபனைகளை எழுப்பியிருந்தனர்.

இதன்போது குறித்த முதியவர் சார்பில் தோன்றிய சிரேஷ்ட சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் அவர்கள் பின்வருமாறு நீதிமன்றுக்கு தனது சமர்ப்பணத்தினை முன்வைத்திருந்தார்.

குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் மேற்படி பிரதிவாதிகளான பிள்ளைகள் கைவிடப்பட்டிருந்த முதியவரை பராமரிக்கும்பொருட்டு தமது வீட்டுக்கு அழைத்து சென்றிருந்தமைக்காக திறந்த நீதிமன்றில் முதியவர் சார்பாக மனமார்ந்த நன்றிகளை பிரதிவாதிகளான பிள்ளைகளுக்கு தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

மேலும் குறித்த வழக்கு தாக்கல் செய்ததன் நோக்கம் பிள்ளைகளான பிரதிவாதிகளை தண்டிக்க வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக குறித்த முதியவரை பிள்ளைகள் உரியவாறு பராமரிக்க வேண்டும் என்பதற்காகவும், மேலும் இவ்வாறான வயது முதிர்ந்த பெற்றோர்களை பராமரிக்காமல் கைவிட்ட மற்றும் கைவிட நினைக்கின்ற பிள்ளைகளுக்கு இது ஓர் பாடமாக அமைய வேண்டும் என்பதற்காகவேயாகும் எனவும் தெரிவித்திருந்தார்.

பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் பிள்ளைகளை பெற்று வளர்த்து ஆளாக்கிய எம் பெற்றோர்களை தமது உயர் இருக்கும்வரை உரியமுறையில் பராமரித்து பாதுகாக்க வேண்டிய தார்மீக பொறுப்பு பிள்ளைகளாகிய எமக்கு உள்ளது என்பதை தெரிவித்துள்ளதோடு, அந்த பொறுப்பிலிருந்து எவரும் நழுவிட கூடாது எனவும் தெரிவித்திருந்தார்.