கூட்டமைப்பின் கோடீஸ்வரன் எம்.பி தலைமறைவு! ரெலோ அதிரடி நடவடிக்கை

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனை கட்சியை விட்டு தற்காலிகமாக இடைநிறுத்தி, ஒழுங்கு நடவடிக்கையெடுக்க தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) முடிவு செய்துள்ளது என்பதை நம்பகரமாக அறிந்தது.

இரண்டொரு தினங்களில் இதற்கான அறிவித்தல் முறைப்படி வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கட்சி முடிவுகளை மீறி, தமிழ் அரசு முகாமிற்கு கோடீஸ்வரன் தாவியதையடுத்து, ரெலோ இந்த அதிரடி முடிவிற்கு வந்துள்ளது.

நேற்று முன்தினம் கூடிய ரெலோவின் தலைமைக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு கொள்கையளவில் எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் தலைமைக்குழு கூட்டத்திற்கு கோடீஸ்வரன் சமூகமளிக்கவில்லை.

ஆனால், நேற்று முன்தினம் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

ரெலோவின் விதிப்படி மூன்று தலைமைக்குழு கூட்டங்களில் கலந்துகொள்ளாவிட்டால், அவரது உறுப்புரிமை இல்லாமல் போகும்.

கோடீஸ்வரன் நீண்டகாலமாக திட்டமிட்டு ரெலோ கூட்டங்களை தவிர்த்து வந்துள்ளார்.

அம்பாறையில் ரெலோவின் சார்பில் களமிறக்கப்பட்டவர் கோடீஸ்வரன். அதேநேரம் அவரது ஒன்றுவிட்ட சகோதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் தமிழ் அரசு கட்சி சார்பில் களமிறங்கினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் எழுதப்படாத வழக்கமொன்றுள்ளது. பங்காளிக்கட்சிகள் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியதும், தமிழ் அரசு கட்சிக்கு தாவும் அந்த வழக்கத்தின்ற்கு, முல்லைத்தீவில் சிவமோகன் எம்.பி, மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் சமீபத்திய உதாரணம்.

தமிழ் அரசிக்கு தாவினால், அரசின் ஊடான வசதிவாய்ப்பை தாராளமாக பெற்றுக்கொள்ளலாமென்பதற்காக இந்தவகையாக தாவல்கள் நடக்கிறது.

ரெலோவின் சார்பில் வெற்றியீட்டினாலும், தேர்தலின் பின்னர் தமிழ் அரசு கட்சி பிரதிநிதியாகவே கோடீஸ்வரன் செயற்பட்டு வந்தார்.

வரவு செலவு திட்ட வாக்களிப்புக்களில் கட்சி முடிவை மீறி இரண்டு முறை வாக்களித்தார். கல்முனை விவகாரத்தை முன்னிட்டு அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென ரெலோ தீர்மானித்து, செல்வம் அடைக்கலநாதன் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விட, கோடீஸ்வரன் வாக்களிப்பில் கலந்து கொண்டார்.

கட்சி முடிவை மீறி வாக்களித்தது பற்றி, பல மாதங்களின் முன்னரே கட்சி செயலாளர் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியிருந்தார். இதை கோடீஸ்வரன் பொருட்படுத்தியிருக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று முன்தினம் ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் நடந்தது.

இதன் போது ஹென்ரி மகேந்திரன் ஒழுங்குப் பிரச்சனையொன்றை எழுப்பினார். கோடீஸ்வரன் தொடர்பாக ஒன்றரை வருடத்தின் முன்னரே தான் சுட்டிக்காட்டியதாகவும், ஆனால், கட்சி அதை கண்டுகொள்ளவில்லையென குறிப்பிட்டார்.

அதன்பின்னரும், கட்சியின் முடிவை மீறி வரவு செலவு திட்டத்தை ஆதரித்ததையும் ஹென்ரி சுட்டிக்காட்டினார்.

அம்பாறையிலுள்ள ரெலோ கட்சியினரை பொருட்படுத்தாமல், வேறு கட்சியினருடன் இணைந்து செயற்படுவதாகவும், இனியும் இந்த இடத்தில் கோடீஸ்வரன் தொடர்பாக பேசி பலனில்லையென்றும் கூறி, அங்கிருந்து எழுந்துபோக முயன்றார்.

எனினும், ஏனையவர்கள் அவரை சமரசப்படுத்தி உட்கார வைத்தனர். இந்த விவகாரம் பற்றி பேசப்பட்டபோது, இரண்டு மூன்று தடவைகள் அவர் எழுந்து செல்ல முயன்றார். மற்றவர்கள் சமரசப்படுத்தி அவரை உட்கார வைத்தனர்.

கோவிந்தன் கருணாகரம், சுரேன் ஆகியோர் கோடீஸ்வரன் தொடர்பில் தாமதமாக முடிவெடுக்கலாமென கேட்டுக் கொண்டனர்.

எனினும், பெரும்பான்மை உறுப்பினர்கள் அதை ஏற்கவில்லை. உடனடியாக அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, அடுத்த ஓரிரு தினத்தில் கோடீஸ்வரனிற்கு உத்தியோகபூர்வமாக விடயத்தை அறிவித்து, கட்சியிலிருந்து இடைநிறுத்துவதென முடிவாகியது.

ரெலோ அமைப்பு முட்டாட்களின் கூடாரமாக மாறி வருவதாக ரவிகரன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.