கிளிநொச்சியில் சஜித்தின் பேச்சால் மக்கள் பாரிய ஏமாற்றம்

கிளிநொச்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களை மாத்திரமே பேசிய சஜித்

புதிய ஐனநாயக முன்னணயின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று கிளிநொச்சி பசுமை பூங்காவில் இடம்பெற்றது.

மதியம் ஒரு மணிக்கு கிளிநொச்சிக்கு வருகை தந்த ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாச, மக்கள் முன் ஆற்றிய தனது பிரச்சார உரையில் தான் ஐனாதிபதியாக வந்தால் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி திட்டங்களை பற்றி மாத்திரமே உரையாற்றினார்.

ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுக்கும் ஒவ்வொரு கைத் தொழில் பேட்டைகள், முன்பள்ளி கல்வி அபிவிருத்தி, விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசமாக உரம் வழங்கல், கடற்றொழில் அபிவிருத்தி, கலாசார மண்டபம் அமைத்தல், உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த அவர், நாட்டில் உள்ள அனைத்து மக்களும் இனம் மதம் மொழி பேதங்களை கடந்து ஒற்றுமையாக வாழ தன்னை ஐனாதிபதியாக தெரிவு செய்யும் கேட்டுக்கொண்டார்.

அரசியல் தீர்வு பற்றியோ, அரசியல் கைதிகளின் விடுதலைப் பற்றியோ, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம், நிலம் உள்ளிட்ட தமிழ் மக்களின் மிக முக்கிய பிரச்சினைகள் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இக் கூட்டத்தில் அமைச்சர்களான மனோ கணேசன், றிசாட் பதியூதீன், விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன் மற்றும் பெருமளவான பொது மக்கள் கலந்துகொண்டனர்.