தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் மனோ பகிரங்க அழைப்பு

சஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து அமைச்சு பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நீங்கள் அரசாங்கத்தை உருவாக்கி விட்டு வெளியில் இருந்து பார்த்துக் கொள்ளக்கூடாது.

நீங்கள் உருவாக்கிய ஜனாதிபதி, அரசில் அனைத்து வரப்பிரசாங்கள், நன்மைகள், அபிவிருத்தி, அதிகாரப்பரவலாக்கல் அனைத்தையும் பெற தமிழர்களிற்கும் உரித்துள்ளது என தெரிவித்துள்ளார் அமைச்சர் மனோ கணேசன்.

மன்னாரில் இன்று (8) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் சஜித் பிரேமதாசவை போராடி ஜனாதிபதி வேட்பாளராக கொண்டு வந்தபோது, எமது எதிரணியினர் சஜித்தை சிறு குழந்தையாக, பையனாக நினைத்தனர்.

இன்று அந்த பையன் கடலிலே விழுந்து காணாமல் போய்விடுமென ராஜபக்ச குடும்பம், அண்ணன் தம்பி, மகன் சேர்ந்திருந்து கனவு கண்டார்கள்.

இன்று அந்த பையன் நாடு முழுவதும் ஓடித்திரிந்து 10 கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.

இந்து மக்கள், இஸ்லாம் மக்கள், பௌத்த மக்கள், கிறிஸ்தவ மக்கள், தமிழ் மக்கள், சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள் என அனைவரையும் இலங்கையர்களாக அணிதிரட்டுவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளது.

அந்த அதிர்ச்சியில் திறந்த வாயை மூட முடியாமல் இருக்கிறார்கள். திறந்தவாய் அப்படியே இருக்கிறது. வாய்க்குள் ஈ ஓடுகிறது.

ஜனாதிபதியாக தெரிவான பின்னர் மக்கள் தன்னை இலகுவாக தொடர்புகொள்ள ஒவ்வொரு பிரதேசசெயலக பிரிவிலும், ஜனாதிபதி செயலக பிரிவொன்றை சஜித் அமைக்கவுள்ளார்.

வடக்கு கிழக்கில் காணி விவகாரம் பெரிய பிரச்சனையாக உள்ளன. பாதுகாப்பு தரப்பு, வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களத்தால் எடுக்கப்பட்ட காணிகளை திருப்பி தருவேன் என விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கைதிகள் விடுதலையையும் விஞ்ஞாபனத்தில் சொல்லியுள்ளார். சில நாட்களின் முன்னர் கோட்டா யாழ்ப்பாணம் வந்தார்.

தமிழில் எல்லா அரசியல் கைதிகளையும் விடுவிப்பேன் என சொன்னவர், கொழும்பு போய் அப்படி சொல்லவில்லையென மறுத்து விட்டார். சஜித் தமிழில் ஒன்று, சிங்களத்தில் ஒன்று, ஆங்கிலத்தில் ஒன்று என்ற பேச்சிற்கு இடமில்லை.

சில மாதங்களின் முன் கொழும்பில் தேவதாஸ் என்ற அரசியல்கைதியை சென்று சந்தித்தேன். உடனடியாக அமைச்சரவையில் பத்திரமொன்றும் சமர்ப்பித்தேன். எனினும், உடனடியாக தேர்தல் தினம் அறிவிக்கப்பட்ட காரணத்தினால் அது நடக்கவில்லை.

தேர்தலில் சஜித் வெற்றிபெற்று ஜனாதிபதியானதும், சஜித்தின் அமைச்சரவையில் மனோ கணேசன் இருப்பேன். அப்போது, முதல் மாதத்திலேயே, முதலாவது பத்திரமாக தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பான பத்திரத்தை சமர்ப்பிப்பேன்.

தமிழ் கைதிகளை எப்படி விடுவிப்பீர்கள் என ராஜபக்சக்கள் யாரும் கேட்டால், நான் பிறகு வைத்து- பார்த்துக் கொள்வேன். கோட்டாபய ராஜபக்ச தமிழ் அரசியல்கைதிகளை விடுவிப்பதாக சொன்னது எனது கையடக்க தொலைபேசியில் காணொளியாக உள்ளது. ருவிட்டரில் உள்ளது. அவராலும் அதை எதிர்க்க முடியாது.

தமிழ் மக்களிற்கான அதிகார பகிர்வை தரவும் சஜித் தயாராக உள்ளார். ரணசிங்க பிரேமதாசா காலத்தில் நடந்த அதிகார பகிர்வு பேச்சு, சந்திரிகாவின் தீர்வுப்பொதி, மகிந்தவின் சர்வகட்சி கூட்ட விவகாரங்களின் அடிப்படையில்

சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவை தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நண்பர்களிற்கு மகிழ்ச்சியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் அரசாங்கத்தை உருவாக்கி விட்டு வெளியில் இருந்து பார்த்துக் கொள்ளக்கூடாது. நீங்கள் உருவாக்கிய ஜனாதிபதி, அரசில் அனைத்து வரப்பிரசாங்கள், நன்மைகள், அபிவிருத்தி, அதிகாரப்பரவலாக்கல் அனைத்தையும் பெற தமிழர்களிற்கும் உரித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலின் பின்னர் சஜித் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள நல்லெண்ணத்தில் அழைப்பு விடுகிறேன்.

அதை கூட்டமைப்புத்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், தமிழ் மக்களிற்கு அதிகார பரவலாக்கல், அபிவிருத்தி தேவை.

கிராமங்கள் அபிவிருத்தியடைய வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு தமிழ் மக்களிற்கு தேவை.

நாங்கள் அரசாங்கத்தை உருவாக்கி விட்டு, ஜனாதிபதியை தெரிவுசெய்து விட்டு நாங்கள் வெளியிலிருந்து வேடிக்கை பார்க்க முடியாது.