திருமலையில் மாணவர்களை கொன்றது யார்? நாமலிற்கு சம்பந்தன் பகிரங்க சவால்

நாமல் ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்து தமிழ் மக்கள் சார்பாக பேச முன்னர், திருகோணமலையில் 5 மாணவர்களை யார் கொன்றார்கள் என்பதை கூற வேண்டும் என தெரிவித்துள்ளார் இரா.சம்பந்தன்.

சஜித் பிரேமதாசவை ஆதரித்து இன்று வவுனியாவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...

நாமல் ராஜபக்ச ஒரு சின்னப்பொடியன். அவரைப்பற்றி பேசுவது அழகான விடயமல்ல. ஆனால் ஒரு விடயத்தை சொல்ல வேண்டும்.

தமிழ் இளைஞர்கள் சார்பாக அவர் பேச முன்னர் திருகோணமலையில் ஐந்து மாணவர்களை கொலை செய்தது யார் என்பதை அவர் சொல்ல வேண்டும்.

திருகோணமலை கடற்கரை வீதியில் பல்கலைகழகத்திற்கு தெரிவான ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

அவர்கள் கொல்லப்பட்ட இரண்டு நாளின் பின்னர் அவர்களின் படங்களை எடுத்துக் கொண்டு மகிந்த ராஜபக்சவிடம் சென்று, இவர்கள்தான் கொலை செய்யப்பட்ட பிள்ளைகள், யார் கொலை செய்தார்கள், ஏன் கொலை செய்தார்கள் என கேட்டேன். பதில் இல்லை. இன்றும் பதிலில்லை.

நாமல் ராஜபக்ச கிளிநொச்சிக்கு வந்து, யாழ்ப்பாணம் வந்து எங்கள் மக்கள் சார்பாக பேசுவதற்கு முன்னர் இந்த இளைஞர்களை யார் கொன்றது என்பதை கூற வேண்டும் என்றார்.