பெரமுன உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ரணில்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடனும், மஹிந்த ராஜபக்சவுடனும் கலந்துரையாடிய பின்னர் பொதுத்தேர்தல் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றத் தெரிவுக்குழுக்கூட்டம் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது. இக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போது பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களை நாளைமறுதினம் சந்தித்துக் கலந்துரையாவிருப்பாக பிரதமர் தெரிவுக்குழு கூட்டத்தில் தெரிவித்தார்.

அதேவேளை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானமொன்றிற்கு வருவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

நாம் எந்த வேளையிலும் பொதுத்தேர்தலொன்றுக்குச் செல்வதற்குத் தயாராகவே இருக்கின்றோம்.

அதிகாரமும், பதவியும் ஊஞ்சல் போன்று எந்தப் பக்கமும் கைமாறும். எனவே இதனைத் தொடர்ந்து பற்றிப்பிடித்துக் கொண்டிருக்க முடியாது. ஆகவே அமைச்சுப் பொறுப்புக்களையும் கையளிப்பதற்கு ஆயத்தமாக இருக்கின்றோம்.

ராஜபக்ச வசமிருந்த ஜனாதிபதிப் பதவி பின்னர் மைத்திரிபால சிறிசேனவிற்கும், தற்போது கோத்தபாய ராஜபக்சவிற்கும் கைமாறியிருக்கிறது.

எனினும் டிசம்பர் மாதம் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையும் அதனைத் தொடர்ந்து நத்தார் பண்டிகையும் வருவதால் எப்படியும் பொதுத்தேர்தலை டிசம்பரில் நடத்துவது சாத்தியமில்லை.

எனவே பெப்ரவரியிலேயே அதனை நடத்த வேண்டியேற்படும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் கோரியிருந்தார். அதற்கு முன்னதாக பொதுத்தேர்தல் நடைபெறும் என்றும் கூறினார்.