புதிய அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்! கோரிக்கை விடுத்த வஜிர அபேவர்தன

மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து பொது தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான பூரண ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட பிரதமர் ரணில் விக்ஜிரமசிங்க தலைமையில் இன்று ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் இடம்பெற்றது.

இந்த கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் வஜிர அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தற்போதைய ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அவரின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என குறிபப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆயுற்காலம் முடிவடைவதற்குள் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு பெரும்பான்மை அனுமதியை வழங்க தயாரில்லை என தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹசிம் தனது தவிசாளர் பதவியையும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியையும் இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அதேபோல் ருவன் விஜேவர்தன தான் வகித்த இராஜாங்க பாதுகாப்பு அமைச்சு பதவியையும், அமைச்சரவை அந்தஸ்தற்ற ஊடகத் துறை அமைச்சு பதவியில் இருந்தும் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மேலும் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக கடமையாற்றிய பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் தான் வகித்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.