நடுத்தெருவுக்கு வந்தார் சிறிகாந்தா? யாழிற்குள் புகுந்தார் செல்வம்

ரெலோ அமைப்பிலிருந்து அந்த கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா, தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் சிலர் பிரிந்து சென்று தனிக்கட்சி ஆரம்பிக்கின்றனர். ரெலொவின் யாழ் மாவட்ட கிளையை அவர்களே கட்டுப்படுத்தி வந்தனர்.

ரெலோவின் யாழ் மாவட்ட கிளையின் 80 வீதமானவர்கள் தம்முடன் இருப்பதாக சிறிகாந்தா அணி தெரிவித்திருந்தது.

இதற்கு பதிலடியாக, யாழ் மாவட்ட உறுப்பினர்களில் 90 வீதமானவர்கள் ரெலோவுடனேயே இருக்கிறார்கள் என கட்சியின் முக்கியஸ்தர் விந்தன் கனகரட்ணம் அறிவித்தார்.

இந்தநிலையில், ரெலோவிலிருந்து பிரிந்து சென்ற சிறிகாந்தா அணியினர், யாழ் மாவட்ட கிளையிலுள்ளவர்களை இழுத்தெடுத்து புதிய கட்சியை ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நாளை, மாலை 3 மணிக்கு கூட்டமொன்றிற்கு சிறிகாந்தா தரப்பு அழைப்பு விடுத்திருந்தது. ரெலோவின் யாழ் மாவட்ட கிளையிலுள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கட்டாயம் வர வேண்டுமென தொலைபேசி வழியாக கட்டளை இடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குழப்படைந்துள்ள யாழ் மாவட்ட கிளையை சரி செய்து, புதிய நிர்வாகத்தை தெரிவு செய்ய ரெலோ திட்டமிட்டுள்ளது.

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நாளை காலை 11 மணிக்கு ரெலோவின் யாழ் மாவட்ட கிளையின் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் அனைத்து யாழ் மாவட்ட கிளை உறுப்பினர்களிற்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

ரெலோவின் கூட்டம் காலை 11 மணிக்கு அறிவிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், சிறிகாந்தா தரப்பு தனது கூட்ட நேரத்தை மாற்றி, காலை 10 மணிக்கு நேரம் குறிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தமது கூட்டத்திற்கு யாழ் மாவட்ட கிளையினர் கலந்து கொள்ள வேண்டுமென கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளைய தினம் நடக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், ரெலோவா, பிரிந்து சென்ற அணியா யாழில் பலமானது என்பது தெரிய வந்துவிடும்.

இதேவேளை, சிறிகாந்தா அணியில் பதவிநிலை தொடர்பான குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக பலரும் அறிந்தது.

ரெலோவிலிருந்து பிரிந்து சென்று, தற்போது சிறிகாந்தா அணியில் அதிருப்தியடைந்துள்ள ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளார்.

ரெலோவின் யாழ் மாவட்ட கிளையில், தனக்கு நெருக்கமான புதியவர்களை முன்னிலைப்படுத்திய சிறிகாந்தா, புதிய கட்சியிலும் அதேவிதமாக அதேநபர்களை முன்னிலைப்படுத்துவதாக அதிருப்தியாளர்கள் தெரிவித்தனர்.

கட்சியின் நீண்டநாள் செயற்பாட்டாளர்கள் புறக்கணிக்கப்படுவதால், தாம் சிறிகாந்தா அணியிலிருந்து வெளியேறி, மீளவும் ரெலோவுடனேயே இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர்.

இதன்படி, சிறிகாந்தா அணியுடன் செயற்பட்ட ஒரு பகுதியினர், நாளை ரெலோவின் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.