ராஜிவ்காந்தியின் கொலைக்கான பெல்ட் வெடிகுண்டு

தமிமீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தற்கொலைக் குண்டு வெடிப்பில், உயிரிழந்தவரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான ராஜிவ்காந்தியின் கொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு குறித்து புதிய அறிக்கை கோரப்பட்டுள்ளது.

இந்திய உச்ச நீதிமன்றம், அந்த வெடிகுண்டு குறித்த புதிய அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு, C.B.I. எனப்படும் அந்த நாட்டின் மத்திய புலனாய்வுப் பணியகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி, தமிழ்நாடு மாநிலத்தின் ஶ்ரீபெரும்புத்தூரில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார்.

அந்தப் பகுதியில் இடம்பெறவிருந்த காங்கிரஸ் கட்சியின் கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்காக, அங்கு வந்த ராஜிவ் காந்தி மேடைப்பகுதியை நோக்கிச் செல்லும் போது, வெடிகுண்டை பெல்ட்டில் அணிந்திருந்த தற்கொலைக் குண்டுதாரி அந்தக் குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

இந்தனையடுத்து அந்தக் குண்டுவெடிப்பில், ராஜிவ் காந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் குறித்த குண்டுவெடிப்பில் குறைந்தது 14 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், தனு என்று பெயருடையவர் என்று கூறப்படும் குறித்த தற்கொலைக் குண்டுதாடி பயன்படுத்தியதும் பெல்ட்டில் பொருத்தப்பட்டதுமான அந்த வெடிகுண்டு குறித்த அறிக்கையையே, இன்றைய தினம் இந்திய உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.

இந்த விடயம் குறித்து C.B.I. எனப்படும் அந்த நாட்டின் மத்திய புலனாய்வுப் பணியகம் ஏற்கனவே அறிக்கை ஒன்று தாக்கல் செய்திருந்த போதிலும், அந்த அறிக்கையில் எந்தவொரு புதிய விடயமும் இல்லை எனக் குறிப்பிட்டே, இந்திய உச்ச நீதிமன்றம் புதிய அறிக்கை கோரியுள்ளது.

குறித்த தற்கொலைக் குண்டு வெடிப்புக் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளன் அண்மையில் சமர்ப்பித்திருந்த மனுவில், தமக்கான தண்டனையை நிறுத்தி வைக்குமாறு கோரியிருந்தார்.

இந்தக் கோரிக்கை மனுவை இன்றைய தினம் பரிசீலித்த போதே, இந்திய உச்ச நீதிமன்றம், C.B.I. எனப்படும் அந்த நாட்டின் மத்திய புலனாய்வுப் பணியகத்திற்கு இந்த உத்தரவை இன்றைய தினம் பிறப்பித்துள்ளது.