புலிகளின் பாடல்களுடனான சீடியை விற்று தண்டனை அனுபவித்து வந்த நபருக்கு கிளிநொச்சி நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்கள் அடங்கிய இறுவட்டை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் ஒரு வருடத்தின் பின்னர் சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன், சட்ட மா அதிபரிடம் எழுத்துமூலம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக சந்தேகநபரை பிணையில் விடுவிக்கப்பட்ட தருமபுரம் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அதற்கமைய தருமபுரம் பொலிஸாரின் அறிக்கைக்கு அமைய சந்தேகநபரை பிணையில் செல்ல கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் இன்று பிணையில் விடுவித்தது.

கிளிநொச்சி, தருமபுரம் பகுதியில் விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்கள் அடங்கிய இறுவட்டை விற்பனை செய்தமை மற்றும் அதனை வாங்கி ஒலிக்கச் செய்தமை என இரண்டு பேர் 2019ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

சந்தேகநபர்களில் ஒருவரான அழகுசாதனக் கடை உரிமையாளரான விஸ்வமடுவைச் சேர்ந்த கந்தசாமி அரிகரனின் விடுதலை தொடர்பில் அவரது உறவினர்கள் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் ஊடாக நடவடிக்கை எடுத்திருந்தனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவரை பிணையில் விடுவிக்கும் அதிகாரம் சட்ட மா அதிபரிடம் உள்ள நிலையில் கந்தசாமி அரிகரனை பிணையில் விடுவிக்க ஆவன செய்யுமாறு கலாநிதி கு.குருபரன், சட்ட மா அதிபர் தப்புல்ல டி லிவேராவுக்கு கடந்த செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.