மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த போதும் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு!

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக காலையில் இருந்து நீண்ட வரிசையில் இருந்தபோதும் சதொச மற்றும் ஒரு சில மொத்த விற்பனை நிலையங்களில் பாரியளவில் பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் நண்பகல் 12 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதும் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதை கருத்திற்கொண்டு பிற்பகல் 2 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது.

கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அமுலுக்கு வந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6மணிக்கு தளர்த்தப்பட்டது.

அதனால் மக்கள் காலையிலே தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்துகொள்வதற்காக சிறமத்துக்கு மத்தியில் சதொச மற்றும் மொத்த சில்லரை கடைகளுக்கு முன்னால் நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தனர்.

மல்வானை பிரதேசத்தில் மக்கள் மருந்தக நிலையங்கள், இறைச்சி, மீன் கொள்வனவு செய்வதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் இருந்து பெற்றுக்கொள்வதை காணமுடிந்தது.மேலும் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் இருந்து சென்றபோதும் ஒரு சில கடைகளில் அரிசி, கோதுமை மா, டின் மீன், பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது.

அதனால் மக்கள் மிகவும் சிறமத்துக்கு மத்தியில் வேறு பிரதேசங்களுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்ய செல்வதை காணமுடிந்தது.மேலும் அரசாங்கம் பருப்பு, டின்மீன் மற்றும் முட்டை போன்ற பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்தாலும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு குறித்த பொருட்களை சில கடைகளில் பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் இருந்தது.

அதேபோன்று நேற்று மரக்கறிவகைகள் சந்தைக்கு வரும்போதும் காலை 10மணியையும் தாண்டியது. தூரப்பிரதேசங்களில் இருந்தே மரக்கறி வகைகள் கொண்டுவரவேண்டி ஏற்பட்டதாலே இந்த நிலை ஏற்பட்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் மரக்கறிவகைகள் சந்தைக்கு வந்ததால் அதனை காெள்வனவு செய்ய மக்கள் முண்டியடித்துக்கொள்ளும் நிலையை காணமுடிந்தது.