விரும்பத்தக்க வகையிலான பிரதிபலிப்பு எதுவும் காண்பிக்கப்படவில்லை! எம்.ஏ.சுமந்திரன்

பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற யோசனையை இன்றைய கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் முன்வைத்த போதிலும் அதற்கு விரும்பத்தக்க வகையிலான பிரதிபலிப்பு எதுவும் காண்பிக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவரும் நிலையில் தற்போதைய நிலவரம் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராய்வதற்கான அனைத்துக் கட்சித்தலைவர்கள் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நானும் ரவூப் ஹக்கீமும் விரைவாக பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தோம். தற்போதைய சூழ்நிலையில் பெருமளவானோர் ஒரே இடத்தில் சந்திப்பது உகந்ததல்ல என்ற போதிலும், மக்களின் கருத்துக்களை உள்வாங்குவதற்கும் பொறுப்புக்கூறலை வெளிப்படுத்துவதற்கும் பாராளுமன்றம் இயங்குவதுஅவசியமாகும்.

எனினும் இந்த முன்மொழிவிற்கு விரும்பத்தக்க வகையிலான பிரதிபலிப்பு கிடைக்கப்பெறவில்லை. மாறாக கட்சித்தலைவர்கள் தொடர்ச்சியான சந்திப்புக்களை மேற்கொண்டு, நிலவரம் குறித்து ஆராயவேண்டும் என்ற எனது யோசனைக்கு கூட்டத்தில் ஆதரவான பிரதிபலிப்பு வெளிப்படுத்தப்பட்டது.