கொரோனா தொற்றில் இருந்து நாட்டை எப்படி மீட்பது...அமைச்சரவையில் இரண்டு மணிநேரம் ஆராய்வு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நாட்டினை மீட்கும் துரித வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்து அமைச்சரவையில் இரண்டு மணிநேரம் ஆராயப்பட்டுள்ளது.

சர்வதேச நிதி உதவிகளை பெறுவது குறித்தும் ஜனாதிபதி அமைச்சரவையில் ஆராய்ந்துள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் கூடியது. காலை 10.30 மணியளவில் கூடிய அமைச்சரவை கூட்டம் சுமார் இரண்டு மணிநேரம் நடத்தப்பட்டது.

வழமையாக அமைச்சரவை கூட்டங்களில் பல காரணிகள் குறித்த தீர்மானம் எடுக்கப்படுகின்ற போதிலும் இரண்டு மணிநேரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து மட்டுமே பேசப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

முக்கியமாக தற்போது ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலத்தில் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வழிமுறை ஒன்றினை கையாள்வது குறித்தும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்தும் சுகாதார துறையினரின் செயற்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகவும், பாடசாலை மாணவர்களின் விடுமுறை காலத்தில் அரசாங்கம் மாணவர்களை எவ்வாறான முறையில் வழிநடத்துவது என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் எட்டுமணி நேரத்தில் மக்களின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படாத வகையில் அமைந்திருப்பதன் காரணத்தினால் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலத்தில் அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுப்பது குறித்தும்,

அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு கொண்டு செல்லும் நிலையில் பாதுகாப்பையும் அதே நேரத்தில் மக்களின் சிரமத்தை குறைக்கும் விதத்திலும் வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதேபோல் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய தற்போதே வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள காரணத்தினால் மக்களுக்கு அதனை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்களை ஊடகங்களின் மூலமாக முன்னெடுப்பது குறித்தும் பேசப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அத்துடன் வங்கிகளை மீளவும் இயங்க வைக்க அறிவுறுத்தல் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து, சர்வதேச நிதி உதவிகளை கொண்டு இலங்கையின் தற்போதைய நிலைமைகளை மீட்டெடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றினை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் வாங்கியுள்ள கடன்களுக்கான தவணைகளை ஒத்திவைக்கும் அல்லது நீக்கும் வேலைத்திட்டங்களை சர்வதேச நாடுகள் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற காரணிகளையும் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் உள்ளூர் கடற்றொழிலாளர்களால் பிடிக்கப்படும் கடலுணவுகளை கடற்றொழில் கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிப்படுத்தினார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தால் கடற்றொழிலாளர்கள் தாம் பிடிக்கும் கடலுணவுகளை சந்தைப்படுத்துவதில் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதை கருத்தில் கொண்டு இன்று இது குறித்த அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,

குறித்த அமைச்சரவை பத்திரத்தில் உள்ளூரில் பிடிக்கப்படுகின்ற கடலுணவுகளை கடற்றொழில் கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்வதற்கும் அதை கொள்வனவு செய்ய 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு செய்யப்பட்டிருப்பதான அனுமதியை அமைச்சரவையில் ஜனாதிபதி வழங்கியதாக தெரிவித்தார்.