அரசாங்கத்தின் அறிவுறுத்தலை மீறி மாளிகைக்காடு துறையில் அலைமோதும் மக்கள் வெள்ளம்!

நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில் பொதுமக்கள் அநாவசியமாக ஒன்று கூடுவதினை தவிர்க்கும் நோக்கோடு நாடெங்கும் ஊரடங்கு சட்டம் நடைமுறையிலிருப்பதினை அனைவரும் அறிவோம்.

அதனால் உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதில் பாரிய நெருக்கடி நிலை இருந்து வருகிறது.

இன்று (26) ஆறு மணித்தியாலயங்கள் மட்டும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை அடுத்து நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் மீன்களை விநியோகிக்கும் மாளிகைக்காடு துறை பாரிய வாகன நெரிசலையும், மிகப்பெரும் சன நெரிசலையும் இன்று அதிகாலை 06.00 மணிமுதல் சந்தித்தது.

மீன்களுக்கு கட்டுப்பாட்டு விலைகள் இல்லாமையால் வியாபாரிகள் பலரும் பல விலைகளுக்கும் மீன்களை விற்பனை செய்து வருவதை காணக்கூடியதாக இருந்ததுடன், கல்முனை பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் அங்கு மக்களை ஒழுங்குபடுத்தும் சேவைகளை செய்துவருவதையும் காணக்கூடியதாக உள்ளது.