அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க கிழக்கு மாகாணத்தில் நடவடிக்கை

கூட்டுறவு சேவையில் உணவு வழங்கலும் விநியோகமும் அத்தியவசிய சேவையாக இருப்பதால் உணவு விநியோக நடவடிக்கையை கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் கூட்டுறவு சங்கங்களின் ஊடாக அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

மத்திய அரசாங்கத்தின் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் சிங்கப்புலி அவர்களின் தலைமையில் இடம்பெறும் இவ் வேலைத்திட்டத்திற்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்களும் பங்களிப்பு வழங்கி வருகின்றனர்.

Sri Lanka Marketing Federation (Mark Fed) பொருள் விநியோக சேவை பாராட்டத்தக்கது. அத்துடன் கடன் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்படுகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை ஆகிய நான்கு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பிரிவிலும் உள்ள 45 பலநோக்கு கூட்டுறவு சங்கங்களினூடாக அத்தியவசிய பொருட்களான அரிசி, சீனி, பருப்பு, டின்மீன் உள்ளிட்ட பொருட்கள் அரசாங்க கட்டுப்பாட்டு விலையில் வழங்கப்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மட்டக்களப்பில் 03 லொறிகளில் 60 மெற்றிக் தொன் பொருட்கள் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. திருகோணமலைக்கு 02 லொறிகளிலும், கல்முனைக்கு 01 லொறியும் கொழும்பிலிருந்து பொருட்களை கொண்டுவருவதற்காக கொழும்பில் தரித்து நிற்கின்றன.

அம்பாறை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பிரிவில் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து தனியாரிடமிருந்து பொருட்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் கிழக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர், அமைச்சின் செயலாளர், அரசாங்க அதிபர்கள் ஆகியோருக்கும் நான்கு பிரிவுகளின் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்கள்,கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பணிப்பாளர்கள்,ஊழியர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்பான சேவைகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் பதிவாளருமான எம்.சீ.எம்.செரீப் தெரிவித்துள்ளார்.