எதிர் காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம்..!

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து எதிர்வரும் காலங்களில் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் ஆகவே தேசிய உணவு உற்பத்தியை அதிகரித்து அடுத்து வரும் காலங்களில் உணவுத் தேவையை பூர்த்திசெய்ய வேண்டியுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது.

அதற்கேற்ப தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதாவும் கூறுகின்றது.

உலகளாவிய ரீதியில் "கொவிட்-19" என அடையாளப்படுத்தப்படும் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் இலங்கை உள்ளிட்ட சகல நாடுகளுக்கும் உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலைமை உருவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சுகாதார பணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சகல நாடுகளும் தமக்கான உணவு சேமிப்பில் அதிக அக்கறை செலுத்தி வருகின்ற நிலையில் இந்த உணவு பற்றாக்குறையின் தாக்கமானது ஐரோப்பிய நாடுகளை அதிகம் பாதிக்கும் எனவும் சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையின் இதற்கான மாற்று நடவடிக்கைகள் என்னவென வினவியபோதே பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலு கூறுகையில், இப்போது உலகளாவிய ரீதியில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கை உள்ளிட்ட உலகின் அனைத்து நாடுகளிலும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது.

சர்வதேச அமைப்புகள் தொடர்ச்சியாக இதனை அறிவுறுத்தி வருகின்றனர். சகல நாடுகளிலும் ஏற்றுமது, இறக்குமதி முற்று முழுதாக தடைப்பட்டுள்ள நிலையில் நாம் அனைவரும் இப்போது மாற்று வேலைத்திட்டங்களை கையாள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனினும் இலங்கையர்களாக நாம் இன்றும் தேசிய விவசாய உற்பத்திகளில் ஈடுபட்டு வருகின்ற காரணத்தினால் எம்மால் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படப்போவதில்லை. ஆனபோதிலும் முன்னெச்சரிக்கையாக தேசிய உணவு உற்பத்தி குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இப்போதும் ஜனாதிபதி தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள விசேட பொருளாதார நிபுணர் குழு தேசிய உணவு உற்பத்தியை பலப்படுத்த வேண்டிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அடுத்து வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தேசிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது.

விவசாயிகள் மீண்டும் இந்த நாட்டில் பலமடையக்கூடிய விதத்தில் தமது உற்பத்திகளை முன்னெடுக்க முடியும். அதற்கான காலமாகவும் இது மாற்றம் பெற்றுள்ளது.

ஆகவே இலங்கையில் சகல பகுதிகளிலும் விவசாயிகள் தமது உற்பத்திகளில் ஈடுபட முடியும். வடக்கு கிழக்கில் அவர்களின் பிரதான உற்பத்திகள் எதுவோ அதற்கான வேலைத்திட்டங்களும், தெற்கில் முன்னெடுக்கக்கூடிய விவசாய பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்ற வேலைத்திட்டமும் மலையக பிரதேசங்களின் உற்பத்திகளுக்கு மாற்று வேலைத்திட்டமும் என நாடளாவிய ரீதியில் தேசிய விவசாயத்தினை பலப்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.