31ஆம் திகதி வரை தடை நீடிப்பு! இலங்கை சிவில் விமான சேவைகள் பணியகம் அதிரடி அறிவிப்பு!

சர்வதேச நாடுகளில் இருந்து பயணிக்கும் சகல வணிக பயணிகள் விமானங்களையும் இம்மாதம் 31 ஆம் திகதி வரையில் நிறுத்தி வைப்பதாக இலங்கை சிவில் விமான சேவைகள் பணியகம் உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுத்துள்ளது.

இலங்கையில் இருக்கும் சர்வதேச பயணிகள் தடைகளின்றி பயணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக சர்வதேச நாடுகளில் இருந்து வரும் பயணிகள் இலங்கைக்குள் வரமுடியாது என்ற பயணத்தடை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வரையில் குறித்த பயணத்தடை காலம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கை பிரஜைகள் உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகள் எவரும் வர முடியாது எனவும், மத்திய கிழக்கு நாடுகளுக்கு எந்த விமான சேவைகளும் இயங்காது எனவும் அமெரிக்காவில் இருந்து பயணிகள் எவரும் இலங்கைக்குள் அனுமதிக்க போவதில்லை எனவும்,

ஏற்கனவே இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் தற்போது உலகில் எந்த நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு எந்தவொரு பயணியும் வர தற்காலிக தடை விதிக்கப்படுவதாக இலங்கை சிவில் விமான சேவைகள் பணியகம் சகல நாடுகளுக்கும் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தல் விடுத்துள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் இந்த பயணத்தடையினை நீட்டிப்பதாக சிவில் விமான சேவைகள் பணியகம் அறிவித்துள்ளது.

எனினும் குறித்த காலப் பகுதியில் இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டு பயணிகள் அவர்களின் நாடுகளுக்கு பயணிக்க வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என கூறியுள்ள போதிலும் பயணிகள் தமது நாடுகளுக்கு செல்ல ஒரு நாளைக்கு ஆறு மணி நேர கால அவகாசமே விமான நிலையத்தில் வழங்கப்படவுள்ளதாகவும் சிவில் விமான சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

தற்காலிகமாக இலங்கை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானங்கள் மற்றும் இலங்கை ஊடாக செல்லும் விமானங்களுக்கு இந்த தடை விதிக்கப்பட மாட்டது எனவும் சிவில் விமான சேவைகள் பணியகம் கூறியுள்ளது.

மேலும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கும், மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக தரையிறங்கும் மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறங்கும் விமானங்களுக்கும் குறித்த தடை நீக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.