மாளிகாவத்தையில் உயிரிழந்த 3 பெண்களினதும் மரணத்துக்கான காரணம் வெளியானது

புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் மாளிகாவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் போது, ஒன்று திரண்ட மக்களால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்த நிலையில், அவர்களின் மரணத்துக்கு நெரிசலால் சுவாசத் தொகுதி தடைப்பட்டமையே காரணம் என பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதிவான் காஜ்சனா நெரஞ்சலா டி சில்வாவின் உத்தரவுக்கமைய, பிரேத பரிசோதனைகள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி ரூஹுல் ஹக் பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்தார்.

இதன்போதே மரணத்துக்கு காரணம் நெரிசலினால் சுவாசத் தொகுதி தடைப்பட்டமையே என தீர்ப்பளிக்கப்பளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்படுவதற்காக சடலங்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, எவ்வித கவனமும் இன்றி மிக ஆபத்தான முறையில் நிகழ்வொன்றினை ஏற்பாடுச் செ ய்தமை, ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் அதனை மீறி மக்களை ஒன்று திரட்டியமை, கொவிட் 19 தொற்று பரவல் தொடர்பில் தனிமைப்படுத்தல் சட்ட ஒழுங்குகளுக்கு அமைய சமூக இடைவெளியை பேணாமல் நடந்துகொண்டமை ஆகியவற்றின் ஊடாக மூன்று பேரின் மரணத்துக்கு காரணமாக இருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட , உதவித் தொகையை பகிர்ந்த வர்த்தகர் அவரது மகன் உள்ளிட்ட 7 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜூன் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.

வாகன உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் வர்த்தகரான தெஹிவளை பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் சரூக், அவரது மகன் மொஹம்மட் இம்தியாஸ், மொஹம்மட் நசீர், தெஹிவளையைச் சேர்ந்த மொஹம்மட் ரிஸ்வான், மாகும்புர பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் யோகேஸ்வரன், நுவரெலியாவைச் சேர்ந்த முபாரக் சங்தூஸ், லிந்துலையைச் சேர்ந்த மருதமுத்து சிவபாலம், மட்டக்குளியைச் சேர்ந்த இமார் பாரூக் அஹமட் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.

கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த டி சொய்ஸாவின் மேற்பார்வையில் மாளிகாவத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோத்கர் அனுர உதயகுமார, குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பிரபாத் குணரத்ன உள்ளிட்ட குழுவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பிரதான சந்தேக நபரான வாகன உதிரிப்பாக வர்த்தகர் ஏழை எளியவர்களுக்கு பகிர கொண்டுவந்திருந்ததாக கூறப்படும் 1000 ரூபா நோட்டுக்கள் 500 ஐயும் ( 5 இலட்சம் ரூபா) பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

கொழும்பு 10 - மாளிகாவத்தை, ஜும் ஆ மஸ்ஜித் வீதியில் உள்ள வர்த்தகருக்கு சொந்தமான வாகன உதிரிப்பாக களஞ்சிய வளாகத்தில் இந்த துரதிஷ்ட சம்பவம் நேற்று நன்பகல் இடம்பெற்றிருந்தது. இதில் கொழும்பு 10 - மாளிகாவத்தை லக்சித்த உயன தொடர்மாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய உமா அகிலா, ஜும்மா மஸ்ஜித் வீதி, மாளிகாவத்தையைச் சேர்ந்த 59 வயதுடைய பெளசியா நிஸா, லக்சித்த செவன தொடர்மாடி குடியிருப்பை சேர்ந்த 68 வயதுடைய பரீனா முஸம்மில் ஆகிய மூன்று பெண்களே இவ்வாறு உயிரிழந்திருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.