க.பொ.த உயர்தரப் பரீட்சை கால அட்டவணை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்கள்!

இவ்வருடம் க.பொ.த உயர்தரப்பரீட்சை ஆரம்பமாகும் திகதி உள்ளிட்ட கால அட்டவணை தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லையெனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்திருக்கிறார்.

சமூகவலைத்தளங்களில் உயர்தரப் பரீட்சை கால அட்டவணையொன்று பகிரப்பட்டுவரும் நிலையிலேயே கல்வியமைச்சு இதுகுறித்த தெளிவுபடுத்தல் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இம்முறை உயர்தரப்பரீட்சை ஆரம்பமாகும் திகதி உள்ளிட்ட கால அட்டவணையொன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் நிலையில், அதில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லையென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

எனவே உயர்தரப்பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவித்தல்களை மாத்திரம் கருத்திற்கொண்டு பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாடு நெருக்கடியொன்றுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் கல்வி சார்ந்த விடயங்களில் தூரநோக்குடனேயே தீர்மானம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

அவ்வாறிருக்கையில் சமூகவலைத்தளங்களின் ஊடாக இத்தகைய பொய்யான செய்திகள் பரப்பப்படுவது கவலைக்குரிய விடயமாகும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.