குணப்படுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கும் வாய்ப்புகள் அதிகம்! விசேட வைத்தியர்

கொரோனா வைரஸ் தொற்றுநோயாளர்கள் என கண்டறியப்பட்டு குணப்படுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கும் வாய்ப்புகள் உள்ளது.

அதேபோல் தனிமைப்படுத்தல் முகாம்களில் நோயாளர்களாக அடையாளம் காணப்படாத நபர்கள் கூட பின்னர் சமூகத்தில் நோயினை பரப்பக்கூடிய அச்சம் உள்ளதாக சுகாதார அமைச்சின் வைத்திய பரிசோதனை மையத்தின் விசேட வைத்தியர் ஜெயரிவான் பண்டார தெரிவித்தார்.

கொவிட் -19 வைரஸ் பரவல் குறித்த சுகாதார அமைச்சின் அடுத்தகட்ட வேலைத்திட்டம் மற்றும் தற்போதுள்ள அச்சுறுத்தல் நிலைமைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களில் பலர் கொவிட் -19 தொற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளானவர்கள். அவ்வாறு இருக்கையில் அவர்களை தனிமைப்படுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் நபர்களில் தொற்றுநோயாளர்கள் குணப்படுத்தப்படுத்தப்பட்டு அனுப்பப்பட்ட போதிலும் கூட அவர்கள் மீண்டும் கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய்த் தாக்கத்திற்கு உள்ளாகும் வாய்ப்புகள் உள்ளது.

அதேபோல் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளின் போது நோய் தாக்கங்கள் எதுவும் அடையாளம் காட்டப்படாது வெளியேறும் நபர்களும் நோய் இருக்க வாய்ப்புகள் உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் அதிக பாதிப்புகள் உள்ளதாக கருதப்படும் நாடுகளில் இருந்து வந்தவர்கள் பலருக்கு அண்மைக் காலங்களில் கூட கொவிட்-19 தாக்கம் உள்ளமை கண்டறியப்பட்டது.

அவர்கள் தவிர்ந்து ஆரோக்கியமாக உள்ளனர் என கருதப்பட்டவர்கள் மீதும் எமக்கு சந்தேகம் உள்ளது. அவர்களுக்கு எந்தவித நோய் தாக்கத்திற்கான அறிகுறிகள் தென்படாது போகலாம், எமது ஆய்வுகளில் அவை வெளிக்காட்டப்படாததாகவும் இருக்கலாம். அவ்வாறு இருப்பவர் மீண்டும் சமூகத்தில் நோயினை பரப்ப வாய்ப்புகள் உள்ளது.

எனவே அனைவரும் மிகவும் அவதானமாக சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளை முழுமையாக பின்பற்றினால் மட்டுமே சமூக பரவலாக கொவிட் -19 மாறுவதை தடுக்க முடியும்.

அதனை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஊரடங்கு நீக்கப்படுகின்ற காரணத்தினால் நிலைமைகள் அனைத்துமே வழமைக்கு திரும்பிவிட்டது என்ற நிலைப்பாட்டிற்கு மக்கள் வந்துவிட வேண்டாம் எனவும் அவர் கூறினார்.