தமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிப்பதே காலசிறந்தது! கருணா அம்மான்

தற்போது நிலையான எதிர்க்கட்சியே இல்லாத நிலையில் தமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிக்கவேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, கல்லடியில் இன்று இடம்பெற்ற கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் பேசிய அவர், தற்போதைய அரசாங்கம் 20 வருடத்திற்கு மேல் நிலைத்திருக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கடந்த மாகாண சபையில் முஸ்லிம்களிடம் தமிழர்களை அடகுவைத்தார்கள் என்றும் இவர்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதுவித அபிவிருத்திகளையும் முன்னெடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட்டுள்ளவர்களில் பலர் வட்டிக்கு காசுகொடுத்து அவர்களினால் பல பெண்கள் தற்கொலை செய்துள்ளதாகவும் இவர்களினால் மக்களுக்கு எந்த சேவையினையும் ஆற்றமுடியாது என்றும் கூறினார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.

திருமதி வித்தியாபதி முரளிதரன் தலைமையில் எட்டு வேட்பாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் களமிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.