ஒட்டுமொத்த இராணுவத்தையும் அவமதித்த அரசாங்கம்! சஜித் வெளியிட்ட தகவல்

பிரதமர் உட்பட அரசாங்கம் கருணா அம்மானின் கூற்றை சாதாரண விடயமாக எடுத்துக்கொண்டுள்ளதன் மூலம் ஒட்டுமொத்த இராணுவத்தையும் அவமதித்திருக்கின்றது.

அடுத்து நாங்கள் அமைக்கும் புதிய அரசாங்கத்தில் கருணா அம்மானை சட்டத்துக்கு முன் கொண்டுவருவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிலியந்தலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் பிரதமர் மக்களை விழித்து நீண்டதொரு உரையில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி இருக்கும் நிலையில் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க தேவையான எந்த வேலைத்திட்டமும் அவரின் உரையில் இல்லை.

மாறாக எமது இராணுவ வீரர்கள் 3ஆயிரம் பேரை கொலை செய்ததாக பகிரங்கமாக தெரிவிக்கும் கருணா அம்மானை சுத்தப்படுத்துவதற்கே அவர் அந்த நீண்ட உரையை மேற்கொண்டுள்ளார்.

மேலும் கருணா பகிரங்கமாக தெரிவித்த விடயத்தின் பாரதூரம் நாட்டின் பிரதமருக்கு புரிவதில்லையா என கேட்கின்றோம். கருணா தனது உரையில், தேர்தலில் போட்டியிவேண்டாம் என்றும் எமது தேசிய பட்டியலில் சந்தர்ப்பம் வழங்குவதாகவும் பிரதமர் தெரிவித்ததாக குறிப்பிடுகின்றார்.

எனவே பிரதமர் உட்பட இந்த அரசாங்கம் கருணா அம்மானின் கூற்றை சாதாரண விடயமாக எடுத்துக்கொண்டுள்ளதன் மூலம் எமது ஒட்டுமொத்த இராணுவத்தையும் அவமதித்திருக்கின்றது.

அதனால் அடுத்து நாங்கள் அமைக்கும் புதிய அரசாங்கத்தில் கருணா அம்மானை சட்டத்துக்கு முன் கொண்டுவருவோம் என்றார்.