வெலிக்கடை சிறைக் கைதிகளின் கொலை வழக்கு தொடர்பில் நீதிபதிகள் முன்னெடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கைதிகள் சிலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சாட்சி கூண்டில் நின்று தமது சமர்ப்பிப்புக்களை முன் வைக்க வேண்டும் என முன்னாள் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமஹேவா ஆகியோர் மூவரடங்கிய கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் முன் தெரிவித்தனர்.

இந்த வழக்கு கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மஞ்சுல திலகரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று (31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மன்றில் ஆஜரான பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி தமது கட்சிக்காரர்கள் சாட்சி கூண்டில் நின்று தமது சமர்ப்பிப்புக்களை முன் வைக்க எதிர்பார்ப்பதாக கூறினார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக சாட்சிகளை அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதன்படி, ஒகஸ்ட் 19 ஆம் திகதி இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் அன்றைய தினம் பிரதிவாதிகளின் சாட்சிகளை பதிவு செய்வதாகவும் அறிவித்தனர்.