தமிழ் தேசியத்தை சீரழித்த கருணாவை மட்டு - அம்பாறை மக்கள் இலகுவில் மறந்துவிட மாட்டார்கள்!

கருணா சிங்களத்தின் கையாள்; திருமலை ஜென்னி சீற்றம் கருணா எதை செய்தாலும் சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே செய்வார்.

கிழக்கு பிரிவினையை தூண்டி தமிழ் தேசியத்தை சீரழித்த கருணாவை மட்டு- அம்பாறை மக்கள் இலகுவில் மறந்துவிட மாட்டார்கள் என மூத்த போராளி திருமதி.ஜென்னி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கான பணியில் 1980களில், காந்திய இயக்கம் ஊடாக இணைந்து கொண்ட திருமதி. ஜென்னி ஜெயச்சந்திரன், பின்னாட்களில் நேரடியாக விடுதலைப் போராளியாகக் களமாடியவர்.

தற்போது, பிரான்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் இவர், இன்றுவரை தமிழ் தேசிய செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.

கடந்த 28/07/2020 அன்று, ஜெர்மன் நாட்டிலிருந்து இயக்கப்படும் TamilMtv [தமிழ்.எம்.டிவி] ஊடக நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கும்போதே கருணாவை கடுமையாக சாடியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பாரிஸ் நகரிலும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான கிழக்குப் பிரிவினை சக்திகள் இயங்குகின்றன.

திருமலை, அம்பாறை மாவட்டங்களின் இருப்பிற்காக, வடக்கு-கிழக்கு பேதமின்றி அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும்.

கருணா சிங்கள அரசின் கையாள், அவர் தேர்தலை நோக்கமாக கொண்டு சில வேலைகளை செய்யலாம். கிழக்கு பிரிவினையால் நாங்கள் பட்ட துன்பங்கள் அதிகம்.

தமிழ் தேசியத்தை உடைத்து விட்டு எவ்வளவு கேவலப்பட்டோம். இன்று நம்மினம் அடையாளத்தை இழந்து தத்தளிக்கின்றது.

இந்த நிலமைக்குக் காரணமான கருணாவை கிழக்கு மாகாண மக்கள் இலகுவில் மறந்துவிட மாட்டார்கள். குறிப்பாக அம்பாறை மாவட்ட மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.