வவுனியாவில் இந்துமத குருமார்களுக்கு பொலிசார் எச்சரிக்கை!

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் பணியாற்றும் குருக்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையினை சேர்ந்தவர்கள் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள பறையனாலங்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் உத்தரவுக்கு அமைவாக இந்து ஆலயங்களின் குருக்கள் மற்றும் ஆலய பரிபாலன நிர்வாக சபையினரின் வீடுகளுக்கு நேற்றைய தினம் (30.07) சென்ற பொலிசார் எந்த அரசியல்வாதிகளுக்கும் நீங்கள் ஆதரவு வழங்க கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறையானது மதஸ்தலங்களில் அரசியல் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ள முடியாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் மத குருமார் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்ற எந்த விதிமுறைகளும் இல்லை அவ்வாறான நிலையில் குறித்த குருமார்களின் வீடுகளுக்கு தனிப்பட்ட ரீதியில் சென்ற பொலிசார் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்ற எ ச்சரிக்கையை விடுத்து சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இந்துக்குருமார் கருத்து தெரிவிக்கையில், எங்களது கோவில்களில் எந்தவிதமான அரசியல் பிரச்சார நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்திருக்கவில்லை.

இருந்தபோதும் பொலிசார் எமது வீடுகளுக்கு தனிப்பட்ட ரீதியில் வந்து எந்தவிதமான அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது, எந்த அரசியல்வாதிகளுக்கும் ஆதரவு வழங்க கூடாது என எ ச்சரித்து சென்றுள்ளனர்.

பொலிசாரின் இந்த நடவடிக்கையானது எங்களது அரசியல் உரிமையை மீறும் செயலாக இருக்கின்றது. தென்னிலங்கையில் பௌத்த குருமார் மற்றும் கிறிஸ்தவ குருமார்கள் பகிரங்கமாகவே அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் நிலையில்,

வவுனியாவில் செட்டிக்குளம் பிரதேசத்தில் பறையாலங்குளம் பொலிசார் இந்து குருமாராகிய நாங்கள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என தெரிவித்துள்ளமையானது மறைமுகமாக தமிழ் மக்களை அச்சுறுத்துகின்றார்களா? என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது என தெரிவித்தார்.

செட்டிக்குளம் பிரதேசத்தின் மெனிக்பாம், பெரியகட்டு மற்றும் கணேசபுரம் பகுதிகளில் போதைப்பொருள் பாவனை சிறுவர் முதல் பெண்கள் வரை அதிகரித்துவரும் நிலையிலும், அரசாங்க அலுவலர்கள் சில கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் பகிரங்கமாக ஈடுபட்டுவகின்ற போதிலும் அவைகளை கட்டுப்படுத்த வேண்டிய பொலிசார் தங்கள் கடமையை செய்யாமல் இருக்கின்றனர்.

இந்து குருமார்களையும், ஆலய நிர்வாகத்தை சேர்ந்தவர்களையும் பொலிசார் அச்சுறுத்தியுள்ள விடயமானது தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலில் தங்கள் அரசியல் கடமையை செய்ய தடை போட்டதாகவே கருதவேண்டியுள்ளது என பிரதேச மக்கள் கருத்து தெரிவித்ததுடன் தேர்தல் ஆணையம் இவ்விடயம் தொடர்பாக வி சாரணை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.