புதியதொரு பலத்துடன் முன்நோக்கிச் செல்வோம் - அகிலவிராஜ் காரியவசம்!

இம்முறை பொதுத்தேர்தலில் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளையும் மீறிய அரசியல் செயற்பாடுகள் முன்னிலை பெற்றிருக்கின்றன.

இது எதிர்காலத்தில் குழப்பகரமான அரசியல் நிலைவரமொன்றைத் தோற்றுவிக்கலாம் என்று சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், தமது கட்சிக்குள் மறுசீரமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு மீண்டும் புதியதொரு பலத்துடன் முன்நோக்கிச் செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய பின்னடைவைச் சந்தித்திருக்கும் நிலையில், இன்று வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

2020 பொதுத்தேர்தலை அமைதியான முறையில் வெற்றிகரமாக நடத்தி முடித்தமைக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரச சேவையாளர்கள், முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நாம் அறிமுகப்படுத்திய அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாகவே இவ்வாறு நீதியானதும் அமைதியானதுமான முறையில் தேர்தலை நடத்தக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கொவிட் - 19 வைரஸ் தொற்றுநோய் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் அது எமது நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குலைத்திருக்கிறது.

அவ்வாறிருக்கையில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் வலுப்படுத்துவதற்குமான செயற்திட்டத்தை இம்முறைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே முன்வைத்திருந்தது.

தற்போதைய சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவை வெளிப்படுத்தியிருக்கும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியைப் பெற்றுக்கொண்டிருக்கும் அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி அதன் ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு நீண்டகால நோக்கிலான பல்வேறு சேவைகளைச் செய்தும் தோல்விகண்டிருக்கிறது.

கட்சி என்ற அடிப்படையில் உள்ளக மற்றும் வெளியக ரீதியாக ஏற்பட்ட சவால்களுக்கு முகங்கொடுத்தோம். எம்முடைய மற்றும் ஏனையோரின் தோல்விகளுக்கும் குறைபாடுகளுக்கும் பொறுப்பேற்றுக்கொள்கின்றோம்.

இம்முறைத்தேர்தலில் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளையும் மீறிச்செல்லும் அளவிற்கு அரசியல் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. இதன் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் சீர்குலைந்த அரசியல் நிலையொன்று ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கின்றது.

இந்நிலையில் அனைவரும் தேர்தல் முடிவுகளை அமைதியான முறையில் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதுடன், இதற்கு முன்னர் செய்ததைப்போன்று ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் மறுசீரமைக்கப்பட்டு புதியதொரு பலத்துடன் முன்நோக்கிச் செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.