இரகசிய தகவல்கள் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு 1805 அழைப்புக்கள்!

குற்றச் செயல்கள் உள்ளிட்ட இரகசிய தகவல்களை வழங்குவதற்காக பொலிஸ் திணைக்களம் அறிமுகம் செய்த 1997, 1917 ஆகிய துரித தொலைபேசி இலக்கங்களுக்கு இதுவரை (அறிமுகம் செய்யப்பட்டு இரு வாரங்களுக்குள் ) 1805 அழைப்புக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

கப்பம் பெறல், போதைப்பொருள் கடத்தல், பாரிய ஊழல் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய இரகசிய தகவல்களை வழங்க அறிமுகம் செய்யப்பட்ட 1997 என்ற துரித தொலைபேசி இலக்கத்துக்கு 1527 அழைப்புக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், போதைப்பொருள் கடத்தலால் திரட்டப்படும் சொத்துக்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தகவல் வழங்க அறிமுகம் செய்யப்பட்ட 1917 என்ற துரித இலக்கத்துக்கு 278 அழைப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

கப்பம் பெறல், போதைப்பொருள் கடத்தல், பாரிய ஊழல் மற்றும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல், பொது மக்கள் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் தகவல்கள், போன்ற விஷேட காரணிகளை தெரிவிக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 1997 என்ற துரித தொலைபேசி இலக்கம் பிரத்தியேக தனியான பொலிஸ் குழுவால் கையாளப்பட்டு வருகின்றது. இது பொலிஸ் உளவுப் பிரிவான பொலிஸ் விஷேட நடவடிவிக்கை பிரிவில் மிக இரகசியமாக இயங்கும் குழுவொன்றினால் கையாளப்பட்டு வரும் நிலையில்,

அவ்விலக்கத்துக்கு 1527 அழைப்புக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

முதல் வாரத்தில் 956 அழைப்புக்களும் இரண்டாம் வாரத்தில் 571 அழைப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு கிடைக்கப் பெற்ற அழைப்புக்களில் கிடைத்த தகவல்களில் 66 தகவல்கள் வெற்றிகரமான சுற்றிவலைப்புக்களுக்கு உதவியுள்ளதுடன் அதில் 14 சுற்றி வலைப்புக்கள் மேல் நீதிமன்றில் வழக்குத் தககல் செய்யுமளவுக்கு பாரிய சுற்றிவலைப்புக்களாக அமைந்துள்ளன.

இந் நிலையில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், போதைப்பொருள் கடத்தலால் திரட்டப்படும் சொத்துக்கள் உள்ளிட்ட கறுப்பு பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் விசாரணை செய்ய முடியுமான சொத்து குவிப்புக்ச்கள் தொடர்பிலான விடயங்கள் குறித்து 1917 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்விலக்கத்துக்கு கடந்த இரு வாரங்களில் 278 அழைப்புக்கள் கிழைக்கப்பெற்றுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.

அந்த இலக்கமானது அண்மையில் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட சொத்து குவிப்பு விடயங்கள் தொடர்பில் விசாரிக்கும் விஷேட பிரிவின் கட்டுப்பாட்டில் செயற்படுத்தப்படும் நிலையில், அவ்வாறு கிடைக்கப் பெற்ற அழைப்புக்களில் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு 38 சம்பவ்ங்கள் தொடர்பில் குறித்த விஷேட பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஏனைய 240 அழைப்புக்கள் ஊடாக கொடுக்கப்பட்ட தகவல்களும், சி.ஐ.டி.யின் குறித்த விடயப் பரப்புக்குள் உள்ளடாங்காத நிலையில் அவை, பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் ஏனைய பொலிஸ் பிரிவுகளுக்கு வழங்க்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை 27 ஆம் திகதி பொலிசாரால் இவ்விரு இலக்கங்களும் அறிமுகபப்டுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.