கிராமங்களில் 100,000 கிலோமீற்றர் வீதி புனரமைப்பை 2024க்குள் நிறைவு செய்ய ஜனாதிபதி உத்தரவு!!

கிராமங்களில் 100,000 கிலோமீற்றர் வீதி புனரமைப்பை 2024க்குள் நிறைவு செய்ய ஜனாதிபதி உத்தரவு

இலங்கையில் கிராம மட்டத்தில் ஒரு இலட்சம் கிலோமீற்றர் பாதையை புனரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை 2024 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக குறித்த கிராமிய வீதிகளை பிரதான வீதிகளுடன் இணைக்கும் திட்டத்தை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கிராமிய வீதி மற்றும் அடிப்படைவசதிகள் இராஜாங்க அமைச்சுக்கான வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயும் கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

விரைவாகவும், பாதுகாப்பாகவும் சொகுசாகவும் போக்குவரத்தில் ஈடுபடும் உரிமை நாட்டு பிரஜைகளுக்கு உள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, சுபீட்சமான எதிர்காலம் என்னும் ஜனாதிபதியின் கொள்கைத் திட்டத்தின் ஊடாக இந்த மக்கள் தேவையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புதிய பாலங்கள், சிறிய மற்றும் இரும்பு பாலங்கள் என்பன இதன்போது அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதேவேளை, கடந்த சில மாதங்களில் 8 ஆயிரம் கிலோமீற்றர் நீளமான வீதிகளுக்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 400 கிலோமீற்றர் வீதி முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த வீதி நிர்மாண பணிகளுக்கான கல், மண், மணல் ஆகியவற்றை முழுமையாக பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு மாவட்ட செயலாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த திட்டங்களை முன்னெடுக்கும் போது ஏற்படும் காலதாமதம் மற்றும் போக்குவத்து பாதிப்புகளை தவிர்க்குமாறும் ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.