மன்னாரில் மீட்கப்பட்ட பாரிய தொகை மஞ்சள்: ஒரு சிக்கினர்

மன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எருக்கலம்பிட்டி கிராமத்தில் கடத்தல் மூலம் கொண்டு வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை மஞ்சள் கட்டி மூடைகள் கடற்படையினரின் உதவியுடன் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (28.09.2020) நண்பகல் இடம்பெற்றுள்ளது.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருக்கலம்பிட்டி கிராமத்தில் இந்தியாவிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட மஞ்சள் மூடைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை புலணாய்வு பிரிவினருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து,

மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பின் பேரில் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் பிரிவினர் குறிப்பிட்ட இடத்தை முற்றுகையிட்டனர்.

இதன்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 952 கிலோ கிராம் மஞ்சள் கட்டி மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மன்னார் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து மேலதிக விசாரனையை மேற்கொண்ட பின் பொலிசார் குறித்த மஞ்சள் மூடைகளை சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.