வுனியாவில் இரட்டைக் கொலை; படுகாயமடைந்தவர் ஆபத்தான நிலையில்

வவுனியாவில் வீடொன்றிலிருந்து இரண்டு பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா ஓமந்தை – மாணிக்கர் வளவுப்பகுதியில் வீடொன்றில் இரண்டு சடலங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த சடலங்கள் மீட்கப்படுள்ளது.

தலையில் பாரிய வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு அவரது உடல் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் மாணிக்கர் வளவு கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவரான 40 வயதுடைய (4 பிள்ளைகளின் தந்தை), மற்றும் கரிப்பட்ட முறிப்பை சேர்ந்த 34 வயதுடைய ஆகிய இருவர் மரணமடைந்ததாக பொலிசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் சந்தேகத்தின் பெயரில் மாணிக்கர் வளவில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் ஓமந்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இரட்டைக் கொலைக்கான காரணம் தெரியவில்லை எனவும், குறித்த கொலைக்கான விசாரணைகள் துரிதப்படுத்துவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த வாரம் திருகோணமலை – மிஹிந்தலை பிரதேச பகுதியிலும் இது போன்ற இரண்டு சடலம் மீட்கப்பட்டன.

பெண்ணின் கழுத்து வெட்டப்பட்ட நிலையிலும், ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.