கொரோனா தொடர்பான தகவல்களை தெரித்துக்கொள்ள தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்!

கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதற்காக சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தின் 1999 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இதற்கமைவாக வைரஸ் தொற்றுக்குள்ளாவதை தவிர்ப்பதற்காக கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகளை போன்று வைரஸ் தொற்றுக்குள்ளானால் தமது குடும்ப அங்கத்தவர்கள் அடங்கலாக ஏனையோருக்கும் அது பரவுவதை தடுக்கும் முறை தொடர்பான ஆலோசனைகளை இந்த தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும்.

இதேபோன்று சம்பந்தப்பட்ட நோய் அறிகுறிகளுடன் தமக்கு covid-19 வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்று உணர்ந்தால் துரிதமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை தெரிந்து கொள்வதற்கும் தேவையான உதவியை பெற்றுக் கொள்வதற்கும் உடனடியாக இந்தத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

இதில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மூன்று மொழிகள் மூலம் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் அத்தோடு வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் தமது ஆலோசனைகளை வழங்குவதற்காக இந்த சேவையுடன் இணைந்துள்ளனர்.

1999 புதிய தொலைபேசி இலக்கத்துடன் எத்தகைய தொலைபேசி வலைப்பின்னல் ஊடாகவும் 24 மணி நேரமும் தொடர்பு கொள்வதற்கு பொதுமக்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.