தீவிரவாதி சஹ்ரான் உள்ளிட்ட குண்டுதாரிகள் தொடர்பில் வெளிவரும் புதிய திடுக்கிடும் தகவல்கள்

சஹ்ரான் ஹஸீம் உள்ளிட்ட குண்டுதாரிகள், 2020 ஆம் ஆண்டில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக திட்டமிட்டிருந்தமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் ரவி செனவிரட்ன இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டுமுதல் சஹ்ரான் ஹஸீம் உள்ளிட்டோர் செயற்பட்டிருந்தாலும், 2017 ஆம் ஆண்டிலிருந்தே தாக்குதலுக்கு அவர்கள் தயாராயுள்ளனர்.

குழுக்களை ஒன்றுபடுத்திக்கொள்ள முடியாதமை காரணமாக, புத்தர் சிலையாவது சேதப்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது.

இதன்பின்னர் நிகழ்த்திய போதனை ஒன்றில், போரட்டக்காரர்களாகவா? அல்லது தாக்குதல்தாரிகளாகவா? இருக்க விருப்பம் என அதில் பங்கேற்றவர்களிடம் சஹ்ரான் வினவியுள்ளார்.

இதன்போது, இந்த நாட்டில் இல்லாமல் வேறு நாடொன்றில் தாக்குதல் நடத்துலாம் என சஹ்ரான் இல்லாத சந்தர்ப்பத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.

எனினும், மீண்டும் வந்த சஹ்ரான், இந்த நாட்டிலேயே தாக்குதல் நடத்துமாறு அவர்களிடம் கூறியுள்ளார்.

இதற்கமைய, 2020 ஆம் ஆண்டில்தான் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்ருந்ததாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் ரவி செனவிரட்ன தெரிவித்துள்ளாiர்.

எனினும், 2019 ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் சஹ்ரான் இந்தத் தீர்மானத்தில் திடீரென மாற்றத்தை ஏற்படுத்தி, இப்போதே தாக்குதல் மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார்.

எனினும், ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் நடத்துவதற்கு ஏப்ரல் 17 ஆம் திகதியே தீர்மானித்துள்ளனர்.

இவ்வாறாக திகதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதை அவதானித்தபோது, சஹ்ரான வழிநடத்தும் ஒருவர் இருக்கிறார் என்பதை ஊகிக்க முடிந்தது.

இந்த நிலையில், தான் ஓய்வுபெறுவதற்கு முன்னர் சஹ்ரானை வழிநடத்திய நபரை கண்டறியவேண்டிய அவசியம் இருந்தாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் ரவி செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அரச சட்டவாதி துண்டுச் சீட்டு ஒன்றில், நபர் ஒருவரின் பெயரை எழுதி, சாட்சியாளரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார்.

இதன்போது பதிலளித்த சாட்சியாளர், தமது சாட்சியத்தில் குறிப்பிட்ட நபர் இவராக இருக்கலாம் என்றும், குறித்த நபருடன் சஹ்ரான் இணைந்து செயற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவினரின் மற்றுமொரு திட்டத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

தாக்குதலில் எவராவது ஒருவர் தோல்வியடைந்தால், அவர் வரவேண்டிய இடமாக கொழும்பில் உள்ள தேவாலயம் ஒன்றை அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அந்த இடத்திற்கு வரும் தோல்வியடைந்த தாக்குதல்தாரி, மற்றுமொருவருக்கு அந்தத் தகவலை வழங்க வேண்டும்.

இதற்கமைய, குறித்த நபரை அழைத்துச்செல்ல மற்றுமொருவர் அந்த இடத்திற்கு வருவதுடன், அவர்கள் பாதுகாப்பான இடமொன்றுக்கு செல்வதே திட்டமாக இருந்தது.

அவ்வாறாக தோல்வியடைந்த தாக்குதல்தாரியை அழைத்துச் செல்ல வரும் நபரின் பெயரை, சாட்சியாளர் துண்டுச் சீட்டு ஒன்றில் குறிப்பிட்டு ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளார்.

குறித்து நபர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சாட்சியாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.