இலங்கையில் மின் உற்பத்தியை அதிகரிக்க அதிரடி நடவடிக்கை! அமைச்சர் டலஸ்

முதலீட்டாளர்களின் தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணத்தை வழங்க முடியாவிட்டால் எதிர்காலத்தில் தொழிலாளர்கள் குறித்து நம்பிக்கை இல்லாமல்போகும்.

அதனால் மின் உற்பத்தியில் திருப்புமுனையை ஏற்படுத்தும்வகையில் புதுப்பிக்கத்தக்க சக்திகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம் என மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, நீர்வழங்கல், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் அபிவிருத்திக்கு மின்சாரம் முக்கியமாகும். என்றாலும் மின் உற்பத்திக்காக பாரியளவில் நிதி செலவிடப்படுகின்றது. செலவிடப்படும் நிதிக்கேற்ற லாபம் கிடைப்பதில்லை.

அதனால் வரலாற்றில் எப்போதும் மின்சாரசபை நட்டத்திலேயே செல்கின்றது. அதனால் மின்சார உற்பத்தியை லாபமீட்டும் வகையில் செயற்படுத்த புதுப்பிக்கத்தக்க சக்திகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. அதற்காக வரவு செலவு திட்டத்தில் போதுமான நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் நாட்டின் மின்சாரத்தின் கேள்விகளை பார்க்கும்போது அன்று மஹிந்த ராஜபக்ஷ் ஜனாதிபதியாக இருக்கும்போது நுரைச்சோலை அனல் மின் உற்பத்தியை ஆரம்பித்திக்காவிட்டால் இன்னும் பாரிய மின்சக்தி பிரச்சினை ஏற்பட்டிருக்கும்.

அதனால் எதிர்காலத்தில் மின்சார பிரச்சினை ஏற்படாதவகையில் புதுப்பிக்க சக்திகளினூடாக மின் உற்பதியை மேற்கொண்டு தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

அதன் பிரகாரம் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக்கான ஆரம்ப நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

அதேபோன்று இன்னும் இரண்டுவாரங்களில் திரவ இயற்கை எரிவாயு கெரவலப்பிடியவில் ஆரம்பிக்கப்படுகின்றது. சூரிய ஒளி ஊடாக மின்சாரத்தை உற்பத்திசெய்யவும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் நாட்டின் மின் கட்டணம் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். என்றாலும் மின் அலகு ஒன்றை உற்பத்தி செய்வதற்காக 23.87ரூபா செலவிடப்படுகின்றது.

ஆனால் ஒரு அலகு மின் 16.67ரூபாவுக்கே விற்பனை செய்யப்படுகின்றது. நுகர்வோரிடமிருந்து 1முதல் 30வரை அலகுக்கு 3.50 ரூபாவே அறவிடப்படுகின்றது.

மேலும் நாட்டுக்குவரக்கூடிய முதலீட்டாளர்களின் தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணத்தை குறைத்துவழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் முதலீட்டாளர்களின் வருகை இல்லாமல் போகும் அபாயம் இருக்கின்றது.

அதுதொடர்பில் சிந்தித்தே புதுப்பிக்கத்தக்க சக்திகளை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம். என்றார்