கோட்டாபய ராஜபக்ஸ - அஜித் டோவால் ஆகியோருக்கிடையில் இரு தரப்பு சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஆகியோருக்கிடையில் இரு தரப்பு சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

பல்வேறு வகையிலும், இருதரப்பினதும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தும் நோக்கில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதற்கமைய, இந்திய – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு, இந்து சமுத்திர வலயத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை முன்னோக்கிக் கொண்டு செல்லல் மற்றும் இலங்கையில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் போன்ற விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.

அத்துடன், இந்திய அரசின் நிதி உதவியுடன், இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதி வேலைத்திட்டங்களை விரைவில் நிறைவு செய்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

மேலும், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்குத் தாக்கம் செலுத்துகின்ற காரணிகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கு, இந்திய அரசு தயார் என இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இரு நாடுகளுக்கிடையில், தற்போது காணப்படுகின்ற இருதரப்பு ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் பலப்படுத்துவதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்தது.