கார்த்திகைத் தீபங்களை காலால் உதைத்த பொலிஸ்; தீபம் ஏற்றக் கூடாதென யாழில் அடாவடி!

மல்லாகம் கோட்டைக்காடு சாளம்பை முருகன் ஆலயத்துக்குச் சென்ற சுன்னாகம் பொலிஸார், கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதியில்லை என்று அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன், அங்கு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் 119க்கு அழைப்பை ஏற்படுத்தி மாவீரர் நாள் தீபம் ஏற்றப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையிலேயே நிகழ்வுக்குத் தடை விக்கப்பட்டது என சுன்னாகம் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், அங்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தீபம் ஏற்ற அலங்கரிக்கப்பட்ட வாழைத்தண்டுகளை காலால் உதைத்து அநாகரியமாக நடந்துகொண்டார்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற சட்டத்தரணி வி.மணிவண்ணன், அந்த ஆலய இளைஞர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சியின் உறுப்பினர் இ.வி.எஸ் செந்தூரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

அதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் உரையாடிய அமைச்சர், இந்துக்களின் பாரம்பரிய வழிபாடான கார்த்திகை தீபத்திருநாளில் கார்த்திகை தீபங்கள் ஏற்றுவதற்கும் சொர்க்கைப்பானை எரிப்பதற்கும் அனுமதியளிக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்த வழிபாட்டை சிலர் பிழையாக அர்த்தப்படுத்தி முறைப்பாடுகளை வழங்குவார்கள் என்றும் அமைச்சர், பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு எடுத்துக் கூறியிருந்தார்.

அத்துடன், சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அழைப்பை ஏற்படுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தீபங்களை ஏற்றுவதும் சொர்க்கப்பானை எரிப்பதும் கார்த்திகைத் திருநாளில் இந்துக்களின் மரபு, இதனை பிழையாக அர்த்தப்படுத்தி தடை விதிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். உடனடியாக அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உறுதியளித்தார்.