பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் ஒத்திவைப்பு!

எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின் பணிகள் தொடர்பில் தீர்மானிப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம் இன்று இடம்பெற இருந்தபோதும் இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று பாராளுமன்ற ஊழியர்களுக்கு பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொண்டதனாலே கூட்டத்தை ஒத்திவைக்க தீர்மானித்திருப்பதாகவே தெரியவருகின்றது.

அமைச்சர் வாசுதேவ நாயணக்கார, ராஜாங்க அமைசசர் தயாசிறி ஜயசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கொவிட் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றனர்.

அவர்களில் அமைச்சர் வாசு தேவ நாயணக்கார மற்றும் ரவூப் ஹக்கீம் கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டிருந்ததுடன் பாராளுமன்ற அதிகாரிகள் மற்றும் சேவகர்கள் சிலருடன் நெருங்கி பழகியிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் பாராளுமன்ற அதிகாரிகள் மற்றும் சேவகர்களிடம் பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இன்று பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளும் பணி இடம்பெற்றதால், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.