மன்னாரில் மகளிற்கு காதல் தொல்லை கொடுத்த ஆசாமி... தந்தையிடம் இரவில் சிக்கிய சுவாரஸ்யம்

தனது மகளிற்கு தொல்லை கொடுத்து வந்த ஒரு தலை காதலனை நூதனமாக பொறி வைத்து பிடித்து, உரித்தெடுத்துள்ளார் தந்தையொருவர்.

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பகுதியின் கிராமமொன்றில் இந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவரின் மகள், கடந்த வருடம் கா.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்தார். அவரது அழகு காரணமாக உள்ளூரில் இளைஞர்கள் மத்தியில் பரிச்சயமான அவரை, அந்த பகுதி இளைஞன் ஒருவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

யுவதியிடம் சில பல முறை தனது காதலை தெரிவித்த போதும், அவர் அதை ஏற்கவில்லை. இருந்தாலும், சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக யுவதியின் பின்னும் முன்னும் இளைஞன் திரிந்துள்ளான்.

இந்த நிலையில் அண்மைக்காலமாக வீட்டுக்கு வெளியே ஏதோ நடமாட்டம் இருப்பதாக யுவதியும், அவருடன் அறையில் தங்கிய இளைய சகோதரியும் உணர்ந்தனர்.

அது குறித்து பெற்றோருக்கு தெரிவித்திருந்தனர், பலமுறை பெற்றோரும், அவர்களும் தேடுதல் நடத்தியும் தடயம் எதுவும் சிக்கியிருக்கவில்லை, அமானுஷ்ய நடமாட்டம் என யுவதி அச்சமடைந்திருந்தார்.

இந்த நிலையில், யுவதியின் தந்தை நூதனமான திட்டமொன்றை வகுத்திருந்தார். யுவதியின் அறை யன்னலிற்கு அண்மையாக இருந்த பெரிய மா மரத்தின் கீழே பொறிக்கிடங்கொன்றை அமைத்து, சந்தேகம் வராத விதமாக மறைப்பை ஏற்படுத்தியிருந்தார்.

கடந்த 13ஆம் திகதி இரவு 11.40 மணியளவில் வீட்டிற்கு வெளியே அலறல் சத்தம் கேட்கவே, தந்தை விரைந்து அங்கு சென்ற போது, பொறிக்கிடங்கிற்குள் இளைஞன் சிக்கியிருந்தார்.

அவரை வெளியே காப்பாற்றிய பின்னர், அவருக்கு அறிவு வரும் விதமாக நான்கைந்து அடி கொடுத்து, பிரதேச மத தலைவரின் தலையீட்டையடுத்து விடுவிக்கப்பட்டார்.

மத தலைவர் அந்த இளைஞனை அழைத்து சென்றுஅறிவுரை கூறி, பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார்.