ரஞ்சன் ராம்நாயக்க உயிருக்கு முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும்!

சிறைச்சாலையில் ரஞ்சன் ராமநாயக்கவின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும்.

எனவே அவரை துரிதமாக கொழும்பிலுள்ள சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

இன்று திங்கட்கிழமை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குச் சென்று ரஞ்சன் ராமநாயக்கவை பார்த்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனைக் கூறிய அவர் மேலும் தெரிவித்தாவது :

ரஞ்சன் ராமநாயக்க தற்போதும் பாராளுமன்ற உறுப்பினராவார். அதே போன்று எதிர்காலத்திலும் பாராளுமன்ற உறுப்பினராகவே இருப்பார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்து தீர்ப்பு கிடைக்கும் வரை இந்த தீர்மானமே நடைமுறையிலிருக்கும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் பாராளுமன்ற செயலாளருக்கு அறிவித்துள்ளது.

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்ற சபாநாயகர் அனுமதியளித்துள்ள அதே வேளை , ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் இவ்வாறு பக்கசார்பாக செயற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாதுகாப்ப்பதற்காக நாம் முன்னின்று செயற்படுவோம்.

ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்து பேசிய போது , அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல்கள் கிடைத்தன. எனவே அவரை இங்கு தடுத்து வைத்திருப்பது அவரது உயிருக்கு அச்சுறுத்தலாகும் என்று நான் எண்ணுகின்றேன்.

அவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும்.

எனவே அவரை உடனடியாக கொழும்பிலுள்ள சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுகின்றோம் என்றார்.