பஸில் – மங்கள அவசர சந்திப்பு: அடுத்தகட்டத்திற்கு திட்டமா?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்குமிடையில் இரகசிய சந்திப்பொன்று கடந்த வாரம் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகாதபோதிலும், சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஆராயப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

தெற்கு அரசியலில் பஸில் ராஜபக்ச போல மங்கள சமரவீரவும் முக்கிய புள்ளியாவார், ஆட்சியை தீர்மானிக்கும் சக்திகளாகவே இருவரும் கருதப்பட்டனர், படுகின்றனர்.

பாராளுமன்ற அரசியலுக்கு விடை கொடுத்தாலும் மங்கள சமரவீர இன்னும் செயற்பாட்டு அரசியலில் இருந்து ஓயவில்லை, சஜித் அணியுடனான உறவும் நல்லதாக இல்லை.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பஸில் - மங்கள சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அதேவேளை, இவ்வாறானதொரு சந்திப்பு இடம்பெற்றுள்ளதா என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான பீரிஸ் மற்றும் சாகர காரியசம் ஆகியோரிடம் இன்று கேள்வி எழுப்பட்டது. குறித்த தகவலை அவர்கள் நிராகரிக்கவில்லை.

தங்களுக்கு தெரிந்தவரை அவ்வாறானதொரு சந்திப்பு நடைபெற்றிருக்காது. இருவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். அந்தவகையில் சந்தித்திருக்கவும் கூடும். என்ற தொனியிலும் கருத்து வெளியிட்டனர்.