யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன்! மாறுபட்ட தகவலால் அரியாலையில் குழப்பம்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞனின் மரணம் குறித்து சர்சை எழுந்துள்ளது.

மணியம் தோட்டப் பகுதியில் நடந்த சென்ற இளைஞன் மீது மோட்டர் சைக்களில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இதுவரை குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை.

குறித்த இளைஞனை கொலை செய்தவர்கள் தொடர்பில் மாறுபட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதும், பின்னர் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பல ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

மணல் கடத்தல், போதைப்பொருள் விநியோகம் என்பனவற்றுடன் அவர் தொடர்புபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. எனினும் அந்த குற்றச்சாட்டை உயிரிழந்தவரின் உறவினர்கள் மறுத்துள்ளனர்.

கொலையாளிகளை கண்டுபிடிக்க மூன்று குழுக்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் தொடர்பில் மாறுபட்ட தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அரியாலை பகுதி மக்கள் பெரும் அதிருப்தி நிலையில் உள்ளனர். இந்த கொலை குற்றச்சாட்டை திசை திருப்பும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல் வெளியிடப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

நேற்று முன்தினம் அரியாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த இளைஞன், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

அவரின் உடலில் மூன்று குண்டுகள் பாய்ந்த நிலையில் அதிக இரத்த போக்குகாரணமாக உயிரிழந்ததாக வைத்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த அனர்த்தத்தில் உதயபுரத்தைச் சேர்ந்த 25 வயதுடைய டொன் போஸ்கோ ரிஸ்மன் என்ற இளைஞன் உயிரிழந்திருந்தார்.