பிரித்தானியாவும் இந்தியாவும் தமிழர்களின் முதுகில் குத்தவில்லை முகத்தில் அறைந்துள்ளன!

ஈழத்தமிழர் மீதான இன அழிப்புக்கான நீதியைப் பூச்சியப்படுத்தும் பணியை ஒபாமாவின் அமெரிக்காவுக்குப் பின்னர் பிரித்தானியா தத்தெடுத்திருக்கிறது என்பது தற்போது அறுதியும் உறுதியுமாக நிரூபணமாகியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பிரித்தானியா தலைமையில் கனடா, ஜேர்மனி, மாலாவி, மசிடோனியா மற்றும் மொன்றிநீக்ரோ ஆகிய மேலும் ஐந்து நாடுகளை உள்ளடக்கிய கருக்குழு தனது பூச்சிய வரைபை வெள்ளிக்கிழமையன்று கசிய விட்டிருக்கிறது. இன அழிப்புக்கான நீதிகோரல் இன்றி, சுயாதீன சர்வதேசச் சாட்சியப் பொறிமுறையும் இன்றி மேலும் ஒன்றரை வருடம் மீண்டும் ஜெனீவாவில் பொறுப்புக்கூறலை இழுத்தடிக்கும் திட்டத்தின் உண்மைக் குறிக்கோள் இலங்கை அரசுடன் பேரம்பேசுவது அல்லது ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவது என்பது மட்டுமே. தமிழருக்கான நீதி அல்ல.

அதேவேளை பிரித்தானியத் தமிழர் அமைப்புகளுக்கு பிறிதாக எழுதிய பதிற் கடிதங்களில் சர்வதேசப் போர்க்குற்ற நீதிமன்றுக்கு இலங்கை விடயத்தை எடுத்துச் செல்வது உசிதமாகாது என்றும் அது நடைமுறையில் பலனளிக்கப்போவதில்லை என்றும் ஐ.நா. மனித உரிமைச் சபையே தொடர்ந்தும் இலங்கை தொடர்பான மனித உரிமைக் காப்பு விடயங்களுக்குச் சிறப்பான பொறிமுறை என்றும் ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுத்துறை போதித்திருக்கிறது.

இலங்கையுடனான தமது இந்தோ-பசுபிக் புவிசார் அரசியற் பேரம்பேசலை எந்தத் திசையில் கொண்டுசெல்வது என்பதைத் தீர்மானிப்பதற்கு மேற்குலகுக்கும் இந்தியாவுக்கும் இன்னும் ஒன்றரை வருடங்கள் தேவைப்படுகிறது போலத் தெரிகிறது.

இலங்கை அரசு மீது கடுமையான தொனியில் வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கை கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றில் கசியவிடப்பட்டது. இதைப் போல தமிழர்களுக்குப் பாதகமாக வெளிப்பட்டிருக்கும் தீர்மானத்தின் வரைபு பிரித்தானியத் தமிழ் வட்டாரங்களிடம் கசியவிடப்பட்டுள்ளது.

இருபதாம் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுவதைக் குறிப்பெடுத்துக்கொள்வதாகக் கூறும் முகப்புக்கூற்றோடு (PP7) சேர்த்து மாகாண சபைத் தேர்தல்களையும் பதின்மூன்றாம் சடடத்திருத்தத்துக்கமைவாக நடாத்தவேண்டும் என்பதை வலியுறுத்துவதாக ஒரு கூற்று அமைகிறது. இதைத் தமிழருக்குச் சாதகமான ஒரு விடயமாகச் சிலர் கருதலாம்.

ஆனால், பதின்மூன்றாம் சட்டமும் மாகாண சபையும் ஈழத்தமிழர் தேசத்தின் இருப்பையே அழித்தொழிக்கும் கட்டமைப்பு இன அழிப்பையோ தேரவாத பெளத்தம் தொல்லியல் என்ற போர்வைக்குள் புரியும் மரபுரிமைச் சிதைப்பையோ மகாவலிக் குடியேற்றங்களையோ தடுத்துநிறுத்தும் அரசியல் வலு இல்லாத ஒன்றாக இருக்கும் வரை இது ஒரு வெற்றுக்கோசமே. இது இந்திய-பிரித்தானிய ஒன்றிணைந்த அணுகுமுறையையே எடுத்துக்காட்டுகிறது.

அமிர்தநாயகம்- நிக்சன்