மகள் பட்டதாரியாவதை அவரால் பார்க்கமுடியவில்லை! கண்ணீர் வடிக்கும் ஜார்ஜ் பிளாய்டின் மனைவி

தன்னுடைய மகள் வளருவதையும் பட்டதாரியாவதையும் ஜார்ஜ் பிளாய்டால் பார்க்க முடியவில்லையே என அவரது மனைவி ராக்சி வாஷிங்டன் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் காவல் அதிகாரி ஒருவரின் முட்டிக்கும் தரைக்கும் நடுவே 8 நிமிடங்கள் 46 நொடிகள் சிக்கிப் பிரிந்தது ஜார்ஜ் பிளாய்டின் உயிர்.

''மூச்சு விட முடியவில்லை; கொலை செய்துவிடாதீர்கள்'' என்ற பிளாய்டின் அபயக்குரல் அங்கு நின்ற இரக்கமற்ற அதிகாரிகளின் செவிகளில் விழவில்லை.

உலகிலேயே மிகவும் வசதியான நகரங்களின் ஒன்றான மினியாபொலிஸ் நகரில் இந்தச் சம்பவம் இடம்பெற்ற நிலையில், இந்த இன்று அமெரிக்கா பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது.

கோபமடைந்த மக்கள் கடந்த ஒரு வாரக் காலமாக நாடு முழுவதும் போராடுகிறார்கள்.

இது சாதாரண போராட்டம் அல்ல, 1968-ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் சுட்டுக் கொல்லப்பட்டபோது நாடு எப்படிக் கொந்தளித்ததோ, அந்த அளவுக்கு நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கம் முதல் வெள்ளை மாளிகை வரை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது மக்கள் போராட்டம்.

இன வெறுப்பை அமெரிக்க அரசு கண்டிக்காமல் போராடுபவர்களை ரவுடிகள் போலப் பார்ப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள அமெரிக்கர்கள், அதிபர் ட்ரம்ப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

32 கோடி மக்கள் உள்ள அமெரிக்காவில் 13% மட்டுமே கறுப்பின மக்கள் உள்ளனர். இதனால் அதிபர் ட்ரம்ப் இந்த விவகாரத்தை வரும் தேர்தலுக்கான கணக்காகவே பார்க்கிறார்.

அதனால் தான் ட்ரம்ப் வெள்ளை இனவாதக் கொள்கைக்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்ட்க்காக நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பேசிய அவரின் மனைவி ராக்சி வாஷிங்டன் ,

"அவரால் ஒருபோதும் இனி மகள் வளருவதைப் பார்க்க முடியாது, அவள் பட்டதாரி ஆவதையும் கண்டுகளிக்க முடியாது. அவர் இப்போது அவளின் வாழ்வில் பாதியில் விட்டுச் சென்றுவிட்டார். அவளுக்கு ஏதோ பிரச்னை என்றால் தந்தை தேவைப்படுவார் ஆனால் இப்போதும் இனி எப்போதும் அது அவளுக்குக் கிடைக்காது" என ஜார்ஜ் பிளாய்டின் மனைவி மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளமை பார்ப்பவர் நெஞ்சங்களை கலங்க வைத்துள்ளது.